Ad Widget

சட்டவிரோதங்கள் அம்பலம்: பி.எம்.சி.எச் சில் இன்று விசேட தேடுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான சம்பவங்கள் அம்பலமாகிகொண்டிருக்கின்றன.

BMICH

தங்களுக்கு கிடைக்கின்ற இரகசிய தகவல்களை அடுத்து பொலிஸாரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் திடீர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டவிரோதமான பொருட்களை மீட்டுவருகின்றனர்.

சனிக்கிழமை (17) முதல் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 6 மணிவரை மட்டும் நான்கு இடங்களில் திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொழும்பு-09 தெமட்டகொடை, சப்புகஸ்கந்த, பிலியந்தலை மற்றும் காலி துறைமுகம் ஆகிய இடங்களிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் சட்டவிரோதமான முறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அவை, முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்கள், முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் திணைக்களங்களின் முக்கியஸ்தர்களுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் அறையை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இன்று திங்கட்கிழமை சோதனைக்கு உட்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலைக்கு பாதுகாப்பு அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை சீல் வைத்தது.

குறித்த பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுதங்கள், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்தே இக்களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த களஞ்சியசாலையானது, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆயுத களஞ்சியசாலையிலுள்ள ஆயுதங்கள் தேர்தல் வன்முறைகளுக்கு பயன்படுத்தப்படுமென ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சில அமைப்புகள் முறைப்பாடு செய்ததையடுத்தே,இந்த களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.

Related Posts