Ad Widget

சட்டம் தந்த உரித்துக்களை தராது அரசு முடக்கி வருவது ஜனநாயகத்திற்கு புறம்பான செயல் – முதலமைச்சர்

vickneswaran-vicky-Cmநாம் எவ்வளவு பணஞ் செலவு செய்து தெருக்கள் போட்டோம், இரயில் வரச் செய்தோம், கட்டடங்கள் கட்டினோம், பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டோம். நீங்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. ஆகவே உங்கள் மாகாண சபையை நடத்த விட மாட்டோம்’ என்பது போல், சட்டம் எமக்குத் தந்த உரித்துக்களையுந் தராது எம்மை முடக்கி வருகின்றது மத்திய அரசாங்கம். இவ்வாறு முடக்குவது ஜனநாயகத்திற்குப் புறம்பான செயல் என வடமாகாண முதலமைச்சர் சீ;.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று காலை 9 மணிக்கு மாந்தை பொதுச் சந்தையைத் திறந்து வைத்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில்,

எமது பாரம்பரிய வாழ்க்கை முறையை மறக்காது, பறி கொடுக்காது, வெறுக்காது புதியவற்றை ஏற்றுக் கொள்வதில் தான் எமது மேன்மை அமைந்திருக்கின்றது. இன்று எங்கள் பாரம்பரியங்கள் மறக்கப்படுகின்றன. உதாசீனப்படுத்தப்படுகின்றன. புதிய வாழ்க்கை முறைகள் உட்புகுத்தப்பட்டு வருகின்றன. உழைத்துப் பணம் பெற வேண்டும் என்ற எண்ணமே எங்களை விட்டு ஓடிப் போய் அந்த இடத்தில் உழைக்காமல் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி வருகின்றது.

இது துரதிஸ்டவசமானது. உழைப்பது சுமையுடையது தான். ஆனால் அந்தச்சுமையைச் சுமப்பதில்த்தான் எமது உழைப்பின் மதிப்பும், மரியாதையும், மகிழ்வும் தங்கி இருக்கின்றது. ஆனால் சுமைகளைக் குறைக்கப் பார்ப்பதில் பிழையேதும் இல்லை. விவசாயிகளுக்குச் சந்தைப்படுத்தல் பாரிய சுமை. புதிய சந்தை அந்தச் சுமையை ஓரளவு குறைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கலாம். விவசாயத்துக்கு உகந்த பலதையும் இச் சந்தையின் ஊடாக நீங்கள் பெற்றுக் கொள்ளவும், விற்றுக் கொள்ளவும் வாய்ப்பு எய்தும்.

எனினும் நான் இங்கு உங்களுக்குக் கூறி வைப்பது என்னவென்றால் எமது பாரம்பரிய இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையைக் கைவிடாது நவீன அனுசரணைகளையும் உள்ளெடுத்து நீங்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும். நகர மக்கள் நாகரிகம் உடையவர்களாகவும், கிராம மக்கள் நாகரிகத்தில் குறைந்தவர்களாகவும் கருதுகின்ற ஒரு எண்ணம் இன்றும் நம்மிடையே இருந்து வருகின்றது. இது மேல்வாரியாகப் பார்ப்பதால் வரும் தவறான எண்ணம். ஏனென்றால் உண்பதற்கு உணவு கிராமத்திலிருந்து தான் வருகின்றது. நகரத்து மக்கள் நடப்பாக நடந்து கொண்டாலும், நாகரிகமானது நகரத்தில்த்தான் இருக்கின்றது என்று நாங்கள் எண்ணினாலும் அவர்களுக்கு உணவுக்கு வாய்ப்பில்லை என்றால் நகர மக்களால் வாழ முடியாது. நாங்களாக நினைத்து எது சரியோ, எது முறையோ அதைச் செய்வது தான் ஜனநாயகம்.

அதாவது மக்கள் தமக்கு நாயகர்களாக வரும் விதத்தில் ஆட்சி பரிணாமம் பெறுவதே ஜனநாயகம். எமது மக்களின் ஆசைகளையும், அபிலாசைகளையும் நாம் பூர்த்தி செய்ய முன் வர வேண்டும். அதை விட்டு விட்டு எமக்கு நலன்களைப் பிரத்தியேகமாகப் பெறும் பொருட்டு மக்களை அடக்கி ஆள முற்பட்டால் அங்கு எதேச்சாதிகாரமே உருவெடுக்கும்.

இலங்கையில் மத்திய அரசாங்கம் இருக்கும் அதே நேரம் மாகாண சபைகளுக்கும், உள்ளுராட்சிச் சபைகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்திருக்கின்றது சட்டம். அவ்வாறு பகிர்ந்து கொடுத்துள்ள அளவுப் பிரமாணம் எமக்குப் போதுமானதாக இல்லாதிருப்பினும் சட்டம் எமக்குத் தந்துள்ளதைக் கூடப் பறித்தெடுக்க அல்லது தராது பறிக்க அரசாங்கம் முயன்று வருகின்றது.

நாம் எவ்வளவு பணஞ் செலவு செய்து தெருக்கள் போட்டோம், இரயில் வரச் செய்தோம், கட்டடங்கள் கட்டினோம், பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டோம். நீங்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. ஆகவே உங்கள் மாகாண சபையை நடத்த விட மாட்டோம்’ என்பது போல், சட்டம் எமக்குத் தந்த உரித்துக்களையுந் தராது எம்மை முடக்கி வருகின்றது மத்திய அரசாங்கம். இவ்வாறு முடக்குவது ஜனநாயகத்திற்குப் புறம்பான செயல்.

அத்துடன் எமக்குத் தரப்பட்ட கார்பட் தெருக்களும், மற்றைய கட்டமைப்புக்களும், வெளிநாடுகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் எமக்குத் தந்துதவிய கொடையே அன்றி அரசாங்கம் தானாக எதையும் எங்களுக்குச் செலவு செய்யவில்லை.

எனவே மேலிருந்து எம்மை முடக்கப் பார்க்காமல் கீழிருந்து எம்மை நாமே ஆண்டு வருவதை மேலிருந்து பார்த்து மகிழ்வடையும் ஒரு அரசியல்ச் சித்தாந்தமே ஜனநாயகம் என்பதை நாம் எல்லோரும் மறந்து விடக் கூடாது.

அதிகாரங்களை நாங்கள் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளோம் என்ற எண்ணத்துடன் எமது கடமைகளை ஆற்றுவதே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

கீழ்மட்ட மக்களின் தேவைகளை அவர்கள் தான் அறிவார்கள். அதற்கேற்பவே அபிவிருத்தி நடைபெற வேண்டும். அதனால் நாடு பற்றிய பாரிய காட்சித்திரையையும் மனதில் வைத்துக் கொண்டு முன்னேறுவதே நாட்டுக்கும்,மக்களுக்கும் நன்மை பயக்கும்.

உங்கள் பிரதேச சபை உங்கள் மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகளைப் பாராட்டும் அதே சமயம் எம்மால் ஆன உதவிகளை உங்களுக்குச் செய்து தரவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிச்சபைகளின் உறவுகளும், அரசாங்கம், மாகாணசபை ஆகியவற்றின் உறவுகளும் சுமூகமாக இருந்தால்த்தான் மக்கள் பயனடைவார்கள்.சுபீட்சம் பெறுவார்கள். அதற்காக மூன்று கட்ட ஆட்சிமுறைகளும் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்துத் தத்தமது ஆட்சிகளைச் சிறப்புடன் ஆற்ற முன் வர வேண்டும் என்று தெரிவித்தார். –

Related Posts