Ad Widget

சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டும் – தவராசா

வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களைக் கட்டுப்படுத்த சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகத் துறைக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. அவர்கள் அதனை சரிவரச் செய்யவில்லை என்பது தமிழ் மக்களுடைய ஆதங்கமாக இருக்கின்றது.

ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த சட்டத்தரணிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். யாழ். நீதிமன்றம் கற்களால் தாக்கப்பட்டபோது குற்றவாளிகள் சார்பில் ஆஜராவதிவில்லையென்று சட்டத்தரணிகள் முடிவெடுத்தார்கள். அவ்வாறே செய்தார்கள்.

அதேபோல் இந்த வாள்வெட்டுக் குழுக்களுக்கெதிராகவும் தாங்கள் ஆஜராகமாட்டோம் என்று அவர்கள் முடிவெடுக்கவேண்டும். இதனை சட்டத்தரணிகளிடம் ஓர் வேண்டுகோளாக கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனெனில் வாள்வெட்டுக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிறையிலிருந்து உடனே வெளியேறி மீண்டும் குற்றச்செயல்களைச் செய்கிறார்கள். அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

Related Posts