Ad Widget

சங்கிலியன் பூங்கா என்ற பெயரில் புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா!

யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச்சந்தியில் உள்ள கிட்டு பூங்காவை நவீனமுறையில் புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்காக முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்தக் கலந்துரையாடல் நேற்றையதினம்(04.12.2012) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பருத்தித்துறை வீதியிலிருந்து செம்மணிக்குச் செல்லும் பிரதான வீதியின் முந்திரைச் சந்திப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிட்டு பூங்காவை மீண்டும் நவீனமுறையில் சங்கிலியன் பூங்கா என்ற பெயரில் புனரமைப்பது தொடர்பிலும், அத்துடன் நவீனப்படுத்தப்படவுள்ள இந்த பூங்காவில் பூந்தோட்டம், சிறுவர்பகுதி, வாகனத்தரிப்பிடம் உள்ளடங்கலாக மின்சாரம், குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தப்பூங்கா முன்னதாக விடுதலைப்புலிகளின் மறைந்த தளபதி கிட்டு நினைவாக அமைக்கப்பட்டு பின்னாளில் நாட்டின் போர் நடவடிக்களினால் கவனிப்பாரற்று செயலிழந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குடாநாட்டின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களுடனும் உள்நாட்டில் வாழும் மக்களை மட்டுமல்லாது வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் கவரும் வகையில் பூங்கா அமைக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் பூங்காவின் மாதிரி படங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பில் துறைசார்ந்தவர்களுடனும் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் நவீன பூங்கா தொடர்பில் கட்டிடக் கலை நிபுணர்கள், கல்விச் சமூகத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட துறைசார்ந்தோரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்படவேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராஜசிங்கம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா, யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர ஆணையாளர் பிரணவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts