Ad Widget

சங்கானை பிரதேச வைத்திய சாலையின் முன்மாதிரியான செயற்பாடுகள்

Hospital_Logoசங்கானை பிரதேச வைத்தியசாலையின் முன்னோடி செயற்பாடுகள், வேலைத்திட்டங்களை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்க நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு அறிந்துகொண்டனர்.

இந்தக் களப் பயணத்துக்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் செய்திருந்தார். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியும் நோயாளர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான மருத்துவர் கு.கணேசலிங்கம் தலைமையில் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை குழுவினர் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்குச் சென்றனர்.

சங்கானை பிரதேச வைத்தியசாலையின் முன்னோடிச் செயற்பாடுகள், வேலைத்திட்டங்களை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மருத்துவர் த.பிரகாசன் களப் பயணம் மேற்கொண்டு சென்ற குழுவினருக்கு எடுத்துக் கூறினார்.

சங்கானை வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் செயலாளர் கு.குணசிறியும் சமுகமளித்திருந்தார். சங்கானைப் பிரதேச வைத்தியசாலையின் மாதிரியை பின்பற்றி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் செயற் பாடுகள் முன்னெடுப்புக்களையும் எதிர்காலத்தில் மேற்கொள்ளுவதற்கு வசதியாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வைத்தியசாலைகளின் அபிவிருத்திச் சபைகளுக்குப் பதிலாக நோயாளர் நலன்புரி சங்க கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதால் சங்கானை பிரதேச வைத்தியசாலையை பின்பற்றி ஏனைய வைத்தியசாலைகளிலும் முன்மாதிரிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக ஏனைய வைத்தியசாலைகளின் உத்தியோகத்தர்கள், நலன்புரி சங்க நிர்வாகிகள் சங்கானை வைத்தியசாலையின் செயற்பாடுகளை பார்வையிடுவதற்கான ஏற்பாட்டை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் செய்து கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்.

Related Posts