Ad Widget

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.

நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் இநதப் பரீட்சை இடம்பெறுகிறது.

இந்தமுறை பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அவர்களுள் 4 இலட்சத்து 7ஆயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று உறுதியான பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, இன்று ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சை மண்டபத்திற்கு பரீட்சார்த்திகளுக்கு சமூகமளிக்க முடியாவிட்டால், அதற்கு சலுகை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையை பாதிப்பின்றி நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு போராட்டங்களில் ஈடுபடுவோரிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர்களின் நலன்கருதி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்காண்டுள்ளார்.

மேலும் இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts