Ad Widget

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2021 மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் – கல்வி அமைச்சர்

2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் இறுதிக்குள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

நேற்றையதினம் அரசு தகவல் திணைக்களத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

கோரோனா வைரஸ் பரவுவதால் நாட்டில் கிட்டத்தட்ட அரைவாசி பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

6 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். தொற்றுநோய் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 27 வரை பரீட்சையை நடத்த முடியாது.

பரீட்சையை மேலும் ஒத்திவைக்க நாங்கள் திட்டமிடாததால், மார்ச் மாதத்தில் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஜூன் மாதத்தில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். எனவே மாணவர்கள் 2021 ஜூலை மாதத்தில் உயர்தரத்தில் கல்வியைத் தொடங்கலாம்.

மூன்று மாதங்களுக்குள் முடிவுகளை வெளியிடும் செயல்முறையை யதார்த்தமாக்குவதற்காக, சிறப்புத் திட்டம் தொடங்கப்படும்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு பரீட்சை நிலையத்துக்கும் கிருமிநாசினி தயாரிப்புகளை வாங்க 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்த காலகட்டத்தில் அரச வேலை விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சைகள் மற்றும் பிற பரீட்சைகள் போன்றன நடத்தப்படும். மொத்தத்தில் 35 பரீட்சைகளை எதிர்காலத்தில் நடத்த கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது – என்றார்.

Related Posts