Ad Widget

கோவிட் -19 நோய்த் தொற்றைத் தடுக்கக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் – மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்! -மாவட்டச் செயலாளர் |

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் – 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் பின்பற்றி கோரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக யாழ்ப்பாணத்தைக் கொண்டு வருவதற்கு ஒத்துழைக்கவேண்டும்”

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண கோவிட் -19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணிக் கூட்டம் மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண கோவிட் -19 நோய் பரவல் பற்றி ஆராயப்பட்டதோடு மாவட்ட நிலமைகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

அத்தியாவசிய உணவு பொருள்களின் இருப்பு, அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கான போக்குவரத்து – விநியோகம், டெங்கு கட்டுப்படுத்தல் நிலவரங்கள் மற்றும் வரும் மழைகாலத்தில் மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன.

அதேபோன்று விவசாயம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் போது உள்ள இடர்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய நிலையில் 800 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதித்தோர் 16ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் மிகவும் விழிப்பாக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலகட்டமாகவுள்ளது. அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தொற் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல தற்பொழுது விழிப்புணர்வுகளை பலதரப்பட்ட மட்டங்களிலும் எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தகர்களுக்குத் தனியாக, அங்காடி வியாபாரிகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுடன் ஈடுபாடு கொண்டவர்கள் தமது நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதை இலக்கு வைத்து குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதனைப் பின்பற்றுவது மக்களிடையே மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனவே ஒவ்வொரு குழுவாக செயற்படுத்துவதன் மூலம் அதனை மக்கள் மத்தியில் தெளிவடைய வைக்க முடியும். அதேபோல் மாணவர்கள் ஊடாக அல்லது பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஊடாக இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஆராயப்பட்டது.

கோவிட் – 19 தொற்று நோய் நிலமையைத் தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே கிராம மட்ட, பிரதேச மட்ட மற்றும் மாவட்ட மட்டக் குழுக்களை அமைத்திருக்கின்றோம். அதனுடைய செயற்பாடுகளை துரிதப்படுத்தி அவற்றை வினைத்திறனாக செயல்படுத்தும்படி இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அந்த குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் கோரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தேவையற்ற ஒன்று கூடுகளை தவிர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஒன்று கூடுவதாகவிருந்தால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் போன்றவற்றில் அவர்களுடைய வாகன இலக்கத்தினை வாகனத்தில் உட்புறத்தில் காட்சிப்படுத்தி அதனை மக்கள் புரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வாடகை வாகன சாரதிகள் தாங்கள் பயணிகளை ஏற்றிச்சென்ற விவரங்களைப் பதிந்து பேணுவது அவசியமானது.

உணவகங்களில் உணவுகளை எடுத்துச் சென்று உண்ணுதல் செயற்பாடு தொடர்பில் சுகாதார நடைமுறை சட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 16 கோவிட் -19 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களாக கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ராஜ கிராமம் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் குருநகர் மற்றும் திருநகர் பகுதிகள் காணப்படுகின்றன.

புங்குடுதீவு ஏற்கனவே முடக்கப்பட்டு தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சுமார் 800 குடும்பங்களை தற்பொழுது சுய தனிமைப்படுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகளை சுகாதாரப் பகுதியினர் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் இடர் கால நிவாரணமாக இரண்டு வாரங்களுக்கான உலர் உணவுப் பொருள் பொதிகள் வழங்குவதற்கு அரச நிதியிலிருந்து முதற்கட்டமாக 7 மில்லியன் ரூபாய் கிடைத்திருக்கின்றது. அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றிலிருந்து எடுத்துள்ளோம். அந்த வகையிலே பிரதேச செயலர்கள் அந்த விவரங்களை திரட்டி அதனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனைவிட மாவட்ட செயலகத்தில் தகவல் தொடர்பு மையம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றோம். இங்கு முப்படை சார்ந்தவர்களும் இடர் முகாமைத்துவ குழுவினரும் இணைந்த வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர்களுடைய தொடர்பு இலக்கங்கள் 021 211 7117. இந்த இலக்கத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

வெளிமாவட்டங்களுக்கான பயணங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்கள் வெளி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய இயல்பு நிலை காணப்படுகின்றது. எனினும் மேல் மாகாணத்தை பொறுத்தவரையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்திற்குள்ளே அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மக்களின் போக்குவரத்துக் காணப்படுகின்றது. எனினும் அத்தியாவசிய பொருள்கள், சேவைகளுக்கான போக்குவரத்துக்கள் வழமைபோன்று இடம்பெறுகின்றன. மேல் மாகாணத்திற்கான போக்குவரத்தில் ஏதாவது தடங்கல் ஏற்படுமானால் அதனை நிவர்த்தி செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்களுக்குரிய பொறுப்பினை உணர்ந்து அனுசரித்து செயற்படுவதன் மூலம் எமது மாவட்டத்தில் தொடர்ச்சியாக தொற்று இல்லாத நிலமையினைப் பாதுகாக்கலாம் – என்றார்.

Related Posts