Ad Widget

கோவிட் – 19 தொற்றை முற்றாக ஒழிக்க இரண்டரை ஆண்டுகளாகும்; அதுவரை மாணவர்களின் கல்வியை வீணடிக்க முடியாது – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

கோவிட்-19 தொற்று நோயின் சவால் முற்றிலுமாக அகற்றப்படுவதற்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில் மாணவர்களின் பாடசாலைக் கல்வியை நிறுத்தி வைப்பது “நடைமுறைக்கு மாறானது” என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது” இவ்வாறு கல்வி அமைச்சர் பேராசிரியர், ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்று நோயின் சவாலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்ற பத்து மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இ -விஸின் ( E –wis ) நிதியுதவியுடன் அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு அதிதிறன் கற்பித்தல் பலகைகளை ((Smart Boards) வழங்குவதற்காகவும் நேற்றையதினம் (24) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார வலிமையை வழங்கும் தனித்துவமான வளங்கள் உள்ளன, நமது நாட்டின் இயற்கை வளங்கள் மனித வளங்களாகும். எங்களுக்கு மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் சிறந்த மனித வளம் உள்ளது.

சிறந்த மாணவர்களை பெயரளவில் மதிப்பீடு செய்வது மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கான பயனுள்ள வளங்களை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க இது ஒரு வாய்ப்பாகும்.

இந்த முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவது குறித்து, பலர் கோவிட் – 19 நோய்த் தொற்று இருக்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு ஆபத்து என்று கூறினர். இருப்பினும், அனைத்து சுகாதார, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறைகள் மற்றும் மாகாண, வலய மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் முழு ஆதரவும், அரசின் மீதான அவர்களின் முழு நம்பிக்கையும் காரணமாக, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ஆம் திகதியன்று நடைபெற்றது. மிகக் குறுகிய 33 நாள்களுக்குள் பெறுபேறுகளை வெளியிடுவதற்கும் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

அதிலிருந்து தப்பி ஓடுவதற்குப் பதிலாக சவாலை எதிர்கொள்ளும் கடினமான பணியை மேற்கொள்வதில் கல்வி அமைச்சுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

பாடசாலை ஆரம்பிப்பதற்கான முடிவை மேலும் விரிவாக்கப்படும். “சில மாகாணங்களில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேற்று பாடசாலைக்கு அனுப்பத் தயங்கினர். இது இயற்கையானது. தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகள் திறக்கப்படும்போது கூட மக்கள் உடனடியாக வீதிகளில் இறங்குவதில்லை. லைட் சுவிட்சைப் போடுவது போல இந்த நிலமைகளை ஒரே நேரத்தில் மாற்ற முடியாது.

ஆசிரியர் வருகை 85 சதவீதமாக இருந்தது. அதைப் பாராட்ட வேண்டும். சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுத்துள்ளோம். அதற்காக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் குழுக்கள் அதை நோக்கி செயல்படுகின்றன. இந்த நிலமைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பாடசாலைகளை மூடுவது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை மூடுவது என்று பொருள். மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் இருக்க வேண்டும் அல்லது பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் பாடசாலைகளை நடத்துவதற்கும் ஒரு அரசாக நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த பொறுப்பை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் – என்றார்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற சிறப்புத் தேவையுடைய இரண்டு மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிப்பீட்டுச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

Related Posts