Ad Widget

கோப்பாய் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழு வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த முதியவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

கோப்பாய் பூதர்மடத்தடியைச் சேர்ந்த கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது 58) என்பவரே படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று மாலை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்த முதியவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞருக்கும் வீட்டில் வசிப்போருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே குறித்த இளைஞன் கூலிக்கு வன்முறை கும்பலை அமர்த்தி தம் மீது தாக்குதலை மேற்கொண்டார் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் சென்ற வாள் வெட்டுக்குழு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இரவு புகுந்த வாள் வெட்டுக் குழு, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில், வாள்கள், கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பலே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.

முப்படைகள், பொலிஸாரை சந்தித்து யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என வடமாகாண ஆளுநர் கலந்துரையாடிய சில மணி நேரங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts