Ad Widget

கோபிதாசின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் – கஜேந்திரன்

kajenthiranமகசீன் சிறையில் உயிர் இழந்த விஸ்வலிங்கம் கோபிதாசின் மரணம் தொடர்பாக நீதியான சா்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்

மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கடந்த 24ம் திகதி மர்மமான முறையில் விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் அது தொடர்பாக நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரியே போராட்டம் நடாத்தப்படவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை வடமராட்சி புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகாமையில் போராட்டம் நடைபெறவுள்ளது.

போராட்டம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் தெரிவிக்கையில்,

விஸ்வலிங்கம் கோபிதாஸ் 2007ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கடுமையான உடல் உள சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனா்.

அந்நிலையில் தற்போது மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கடந்த 24ம் திகதி மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இவரது மர்ம மரணத்திற்கு நீதியான சா்வதேச விசாரணை கோரியும், அரசியல் கைதிகள் மீதான சித்திரவதைகள் துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்தக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னேடுக்கபடுகின்றது.

எனவே தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடரும் படுகொலைகள், துன்புறுத்தல்கள், சித்திரவதைகள், மருத்துவ வசதிகள் மறுக்கப்படல் உள்ளிட்ட அடக்குமுறைகளை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்தவும் இவற்றை தடுத்து நிறுத்தவும், கைதிகளது விடுதலையை உறுதிப்படுத்தவும் சா்வதேச சமூகம் உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென வலியுறுத்தியும், நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் வேறுபாடுகளை மறந்து கலந்துகொண்டு இப்போராட்டம் வெற்றிபெற உதவுமாறு அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

Related Posts