Ad Widget

கொழும்பில் கூட்டமைப்பு போட்டியிட்டால் தமிழரின் வாக்குகள் சிதறடிக்கப்படும்; சண். குகவரதன்

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே கொழும்பு உட்பட வேறு பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் தமிழர் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிர்வாகச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண். குகவரதன் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் தமிழரின் வாக்குகள் சிதறடிக்கப்படும் என்றும் கூட்டமைப்பின் இந்த செயற்பாடு அரசியல் பலவீனத்தை வெளிக்காட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே கூட்டமைப்பு போட்டியிடும் என செய்திகள் வெளியானதை அடுத்து அறிக்கையொன்றை வெளியிட்ட சண். குகவரதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அவ்வாறான முடிவை வன்மையாகக் கண்டித்தார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக 2006 ஆம் ஆண்டு மற்றும் 07 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டதையும் காணாமற்போனதையும் கண்டித்து, கொழும்பில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தியது.

வெள்ளைவானைக் கண்டு தமிழர்கள் அச்சத்தில் ஓடி ஒழிந்த காலத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியும் அதன் ஆதரவாளர்களும் தலைநகர் கொழும்பில் துணிவோடு போராட்டங்கைளை நடத்தி தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தினர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விடயத்தில் அவர்களுக்கான போராட்டங்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பில் நடத்தியது. இன்றுவரை அதற்கான போராட்டங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியை மையமாகக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி ஈடுபடுகின்றது.

அந்தக் காலகட்டங்களில் தலைமறைவாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று, கொழும்பில் போட்டியிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை பெற நினைப்பது வேடிக்கையானது.

தமிழ் முற்போக்கு கூட்டணி வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. ஆனால் அது மலையக தமிழ் மக்களுக்கான கட்சியென கூட்டமைப்பிலுள்ள உறுப்பினர்கள் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் செயலாளராக இருக்கும் நான், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். அத்துடன், எனது பாட்டனார் நவாலியைச் சேர்ந்த பிரபல தமிழ் புலவர் ஆவார்.

ஆகவே, பொய்யான பிரசாங்கள் செய்வதை தவிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான நேரத்தில் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என தாழ்மையாகக் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts