கொரோனா வைரஸ்: வடக்கு மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

சீனாவை மையமாகக் கொண்டு பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து, வட மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரான சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கு உள்ளானவர்களுக்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி தொடர்பாக இன்று (புதன்கிழமை) யாழ்.போதனா வைத்தியசாலையில், வைத்திய நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகத்திற்கிடமானவர்களை அனுமதித்து, விசேட சிகிச்சைகள் அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

பூரண சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சை அளிப்பதற்கு சுகாதார அமைச்சு உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக பீதியடையத் தேவையில்லை என்றும் சீன பெண் தவிர்ந்த ஏனைய எவரும் கொரோனா வைரஸ் குறித்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தொற்குக்குள்ளான நபர் ஒருவருடன் நெருக்கமாக பழகும்போதும் அதாவது 2 மீற்றர் தூரத்திற்கு நெருக்கமாக பழகும்போது பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் இந்த தொற்று தொடர்பாக மக்கள் எந்தவித பயமும் அடையத் தேவையில்லை” என மேலும் தெரிவித்தார்.

Related Posts