Ad Widget

கொரோனாவை தடுக்க மேலும் பல தீர்மானங்கள்

  • நாட்டுக்கு வருகைதரும் விமானங்கள் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தம்….
  • நாடு திரும்பிய அனைவரும் கண்காணிப்புக்கு…..
  • மக்களின் சாதாரண இயல்பு வாழ்வுக்கு அவசியமான அனைத்து வசதிகளும்…..
  • மக்களை அச்சத்துக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை…

கொரோனா என்னும் கொவிட் 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக இலங்கைக்கு விமானங்கள் வருவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். தீர்மானம் இன்று (18) நள்ளிரவு முதல் செயற்படுத்தப்படும்.

சாதாரண இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் பொருளாதார மற்றும் வியாபார நடவடிக்கைகள் உட்பட ஏனைய அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் அவர் திணைக்கள மற்றும் நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதியின் தலைமையில் கொரோனா தடுப்பு செயலணியுடன் நேற்று (17) காலை   ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டியிருந்தாலும் நாட்டை செயலிழக்கச்செய்ய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கூறினார்கள். சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அவற்றை செயற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கலந்துரையாடலை ஆரம்பித்து கொரோனா அச்சுறுத்தலை வெற்றிகொள்வதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், நோய் தடுப்பு செயலணி ஜனவரி 26 ஸ்தாபிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அதுவரை எந்தவொரு நாடும் இவ்வாறான நிலையம் ஒன்றை ஆரம்பித்திருக்கவில்லை. சீனாவின் வூஹான் நகரம் மற்றும் ஏனைய நகரங்களில் இருந்த மாணவர்கள் உட்பட அனைத்து இலங்கையரும் திருப்பி அழைத்துவரப்பட்டனர். நாட்டுக்கு வரும் அனைவரையும் நோய் கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்காக பல நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வைரஸ் பரவுவதை தடுக்கும் செயற்பாட்டை மேலும் இலகுபடுத்தும் நோக்கத்துடனேயே திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் 03 நாட்கள் அத்தியாவசிய சேவை தவிர ஏனைய பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

யாத்திரைக்காக இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் கிட்டத்தட்ட 300 பேர் பல இடங்களில் தங்கியிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். அவர்களை ஒரு இடத்தில் ஒன்றுசேர்த்து மீண்டும் அழைத்துவருவதற்காக விமானம் ஒன்றை அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ்  பற்றி உலக சுகாதார அமைப்பு விடுத்த அறிவித்தலுடன் வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து நோய் கண்காணிப்பு செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படாது மறைந்து இருப்பவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் அவர்கள் பற்றி மக்களை தெளிவுபடுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.

“ஏற்பட்டுள்ள பிரச்சினையை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்த தேவையில்லை. பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அவசியமில்லை. பொதுத்தேர்தலை பிற்போடத்தேவை எனின் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதற்கான அதிகாரம் உள்ளது” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

ஒன்றுகூடல், பல்வேறு விழாக்கள் மற்றும் மக்கள் ஒன்றுசேர்தல் போன்றவற்றை இயலுமான அளவு குறைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும்  கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

வைரஸ் பரவுவதை அடிப்படையாகக்கொண்டு மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் நோக்கத்துடன் வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடலில் அவதானம்  செலுத்தப்பட்டது.

பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் விடுமுறை வழங்குவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, கொரோனா தடுப்பு செயலணியின் அங்கத்தவர்கள், சுகாதார மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.17

Related Posts