கொத்து குண்டு விவகாரம்: உரிய பதிலளிக்காத இலங்கை அதிகாரிகள்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அண்மையில் வௌியான செய்திகளுக்கு, அரசாங்கம் உரிய பதில் எதனையும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

cluster bombs

cluster bombs-2

cluster bombs-3

இந்த விடயம் குறித்து தற்போது எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளதோடு, குறித்த அறிக்கை பற்றி ஆராய்வதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்கா களன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இறுதிக் கட்ட போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன என்று பிரித்தானிய ஊடகமான தி கார்டியன் நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் க்ளஸ்டர் கொத்து குண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை உள்நாட்டுப் போரின்போது சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்து குண்டுகளால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை இதனை இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை இராணுவம் கொத்து குண்டுகளை வீசியது உண்மைதான் என்று பிரித்தானியாவைச் சேர்ந்த தி கார்டியன் நாளிதழ் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

கொத்து குண்டுகளின் 42 பாகங்கள் ஆனையிரவு, பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் படங்களை தி கார்டியன் வெளியிட்டுள்ளது என தி ஹிந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

இது இலங்கை இராணுவத்துக்கு எதிரான வலுவான சாட்சியமாக அமைந்துள்ளது.

இறுதிப் போரின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தார் என்றும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஹலோ டிரஸ்ட் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதன் முன்னாள் ஊழியர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் கார்டியனின் செய்தி இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts