Ad Widget

கொடிகாமம் விபசார விடுதியை நடத்த பாதுகாப்பு புலனாய்வாளர்கள் ஒத்துழைப்பு!!

கொடிகாமம் பகுதியில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட விபசார விடுதி, பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்தார்.

கொடிகாமம் விபசார விடுதியில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட அவ்விடுதியின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் இம்மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புதன்கிழமை (22) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, விடுதி உரிமையாளர் மற்றும் உதவியாளருக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரினர்.

இதன்போது, அவர்களுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதவான், மேற்படி விபசார விடுதி பாதுகாப்பு புலனாய்வாளர்களின் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்பட்டமை நீதிமன்றிற்கு தெரியவந்துள்ளதாகவும் இவ்வாறான குற்றங்களுக்கு மூன்று மாதம் காலம் வரை பிணை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் பொலிஸ் விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்ததுடன், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என பொலிஸாரும் தமது ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதப் பிரதிவாதங்களை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு முழுமையான அறிக்கையினை மன்றிற்கு சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

Related Posts