Ad Widget

கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்களுக்கு 3 மாத கால தடுப்புக்காவல் உத்தரவு

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பாக காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில்,

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் மருத்துவ பீட மாணவர் ஒருவர் பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

தற்போது 9 மாணவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூவர், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும்.

ஏனைய ஆறு மாணவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 6-1 பிரிவின் கீழ் 72 மணித்தியால தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என்று விசாரணையாளர்கள் கருதினால், மேலும் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

இவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரே விசாரித்து வருகின்றனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையே மாணவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டதும், தடுத்து வைக்கப்பட்டுள்ளதும், வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது சிறிலங்கா படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்னம் உயரதிகாளிடம் பேசி மாணவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி இன்று கிளிநொச்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts