Ad Widget

கேப்பாப்புலவு மக்களுக்கு நீதிமன்றம் அழைப்பு!

முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களில் சிலரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேப்பாப்புலவிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவ முகாமுக்கு முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் தங்களது பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.எம்.எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது மன்றில் முன்னிலையான முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை அதிகாரி இதனால் இராணுவத்தினர் எதிர்கொண்டுள்ள இடர்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

எனினும் இப்போராட்டத்தில் உள்ள நியாயமான காரணங்களை மன்றில் எடுத்துக்கூறிய மக்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி திருக்குமரன், மக்களிடம் இருந்தும் கருத்துக்களைப் பெற நீதிவான் அனுமதியளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்றைய தினம் மக்களின் கருத்துக்களைக் கேட்பதற்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Related Posts