Ad Widget

கேப்பாப்பிலவு போராட்டம் குறித்த அரசின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது: யாழ் ஆயர்

நல்லாட்சி அரசு தாமாகவே முன்வந்து செய்திருக்க வேண்டிய ஒரு பணியை கேப்பாப்பிலவு மக்கள் கடந்த 18 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தியும், இதுவரை அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது என யாழ் ஆயர் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் குறித்து யாழ். ஆயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விமான படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (சனிக்கிழமை) 19 நாட்களாகின்றன. அவர்களின் போராட்டம் இவ்வாறு எவ்வித தீர்வுமின்றி தொடர்வது மனவருத்தம் அளிக்கின்றது.

இதேவேளை புதுக்குடியிருப்பு மக்களும் 16ஆவது நாளாக போராடி வருகின்றனர். தம் சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை நகரப்போவதில்லை என இம்மக்கள் மிக உறுதியாக இருப்பது எல்லாவகையிலும் நீதியானதும் நியாயமானதுமாகும்.

நல்லெண்ண அரசு உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண விரைந்து செயற்பட வேண்டும் என அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பேரால் அரசிற்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அத்துடன், இது தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts