Ad Widget

கூட்டு வன்புணர்வு: இருவருக்கு தசாப்த சிறை; ஒருவருக்கு பிடியாணை!

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளி பகுதியில், காதலுடன் சென்ற யுவதியினை கடத்திக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (06) தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையான 10ஆயிரம் ரூபாயைச் செலுத்த தவறின் 6 மாத கால கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும். இதேவேளை, பாதிக்கப்பட்ட யுவதிக்கு, இழப்பீடாக 10இலட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறின், மேலும் 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை, கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டு, தலைமறைவாகியுள்ள மூன்றாவது எதிரிக்கு பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு, பொலிஸாருக்கு உதவிபுரிந்த இராணுவ வீரர்களையும் நீதிபதி, இதன்போது பாராட்டினார்.

மேற்படி யுவதி, தனது காதலனுடன் முச்சக்கரவண்டியில் 2014 ஆம் மார்ச் மாதம் 07ஆம் திகதி சென்றுகொண்டிருந்த போது, முள்ளிபகுதியில் முச்சக்கரவண்டியினை இடைமறித்த நபர்கள், காதலனை தாக்கி விட்டு, யுவதியை கடத்திச்சென்று கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபர், நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இரண்டாவது சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால், யாழ். மேல் நீதிமன்றுக்கு கடந்த வருடம் மாற்றப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தீர்ப்பு வழங்குவதற்காக யாழ். மேல் நீதிமன்றில் நேற்று (06) எடுத்து கொள்ளப்பட்டது. தன்மீதான குற்றத்தை, ஏற்றுக்கொள்வதாக சட்டத்தரணி மூலம் அவர் தெரிவித்திருந்ததை அடுத்தே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

Related Posts