Ad Widget

கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்கும் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைப்பதென்றும் முடிவு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது உயர் பீடம் அமைக்கும் தீர்மானம் ஐந்து கட்சிகளினாலும் ஏகமானதாக எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா மூவர் இணைக்கப்படும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த உயர் பீடம் அமைக்கப்படவுள்ளது. உயர் பீடம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், மாவட்ட ரீதியிலும் குழுக்களை அமைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்,பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் ஆகியோரும் டெலோ அமைப்பின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கோ.கருணாகரம்(ஜனா), சிவாஜலிங்கம் ஆகியோரும் ஈ.பி.எல்.ஆர்.எப். அமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் ஆனந்தசங்கரியும், புளோட் அமைப்பின் சார்பில் பவான், ஆர். ராகவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவுசெய்யவேண்டும் என்ற கோரிக்கையினை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கோரிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts