Ad Widget

கூட்டமைப்பு 13 ஐ ஆதரித்திருந்தால் சுயாட்சியை பெற்றிருப்போம் : டக்ளஸ்

daklasமாகாணசபை உரிமைகளை எதிர்த்து வந்த கூட்டமைப்பு 13 ஆவது திருத்தத்தை அன்றே ஆதரித்திருந்தால், நாம் சுயாட்சியை நோக்கி சென்றிருக்கலாம் என்பதுடன் தமிழ் மக்கள் இத்தகைய பேரழிவுகளை சந்திக்கவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டிருக்காது என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எது இங்கு நடந்து முடிந்திருந்தாலும், தமிழ் பேசும் மக்கள் தோற்றுப்போனவர்கள் அல்லர். இந்த உண்மையை சகலருக்கும் உணர்த்த, எமது சொந்த மண்ணில் முழுமையாக நிமிர்ந்தெழும் காலம் நெருங்கி வருகிறது. மக்களுக்காக நாம் சுமக்கும் பாரம் அதிகம். ஆனாலும் செல்ல வேண்டிய இலக்கின் தூரம் அதிகமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாம் நடந்து வந்த பாதையில், கடந்து வந்த சவால்களுக்கு மத்தியிலும், உங்களை விட்டு எங்கும் விலகி ஓடி விடாமல், உங்களுடனேயே இருந்து வந்திருக்கிறோம்.

உங்களை உசுப்பேற்றி, அவலங்களை உங்கள் மீது சுமத்தி விட்டு ஓடிப்போனவர்கள், இன்றைய சுமுகமான சூழ்நிலையிலும், தேர்தல் காலங்களிலும் மட்டுமே உங்களிடம் வந்து நிற்பார்கள். நீங்கள் அவலப்படும் போது அவர்கள் இங்கு வந்து நிற்கவில்லை. உங்களது துயர்களை துடைக்கவும் இல்லை.

உரிமை என்பது வெறுமனே அரசியலுரிமை மட்டுமல்ல. தமது வரலாற்று வாழ்விடங்களில் மக்கள் மீள்குடியேற வேண்டும். வாழ்வாதார வசதிகளை அனுபவித்து மகிழ வேண்டும். தொழில் துறைகளில் மக்கள் தடையின்றி ஈடுபட வேண்டும். வறுமையில் இருந்து மீட்சி பெற வேண்டும்.

விவசாயம், கடற்றொழில், பனை தென்னை வளம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், மின்சார வசதி, கல்வி, சுத்தமான குடிநீர், போக்குவரத்து, வர்த்தகம் சிறந்த சிவில் நிர்வாகம் என சகல துறைகளிலும் எமது மக்கள் நிமிர்ந்தெழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவைகளையே நாம் இது வரை ஓய்வு உறக்கமின்றி எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் செய்து வந்திருக்கிறோம். மத்திய அரசில் நாம் எமது மக்களின் பிரதிநிதிகளாக பங்கெடுத்து வருவதால் மட்டுமே இவைகளை எம்மால் சாதிக்க முடிந்திருக்கிறது.

நடிப்புச் சுதேசிகளின் வஞ்சகம்

நாம் சாதித்தவைகளில் சிறு துளியை கூட தேர்தலுக்காக மட்டும் தமிழ் தேசியம் பேசி, போலியான எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்கள் எவரும் இங்கு செய்திருக்கவில்லை. நெஞ்சில் உரமும், நேர்மை சிறிதும் இல்லா நடிப்புச் சுதேசிகளின் வஞ்சகம் அல்லவா இது.

மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை எமது கையில் நீங்கள் வழங்கும் போது, நாம் இது வரை செய்து வந்த சேவைகளையும், தேவைகளையும் முழு நிறைவாக செய்து முடிப்போம்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிஜமாக்கி மாகாணசபை ஆட்சியை பலப்படுத்தி, வளர்த்தெடுப்பதன் மூலமே எமது அரசியல் இலக்கை நோக்கி நாம் செல்ல முடியும்.

இதை நாம் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கின்றோம். நடிப்புச் சுதேசிகள் கடந்த கால்நூற்றாண்டுகளாக 13 ஆவது திருத்தத்தை எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

மாகாணசபை உரிமைகளை அருவருப்பாக அணுகியவர்கள் தேர்தல் என்றவுடன் பதவி நாற்காலிகளுக்காக தேடி வந்திருக்கிறார்கள்.

அவலங்கள் நிகழ்ந்திருக்காது

எம்முடன் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் 13 வது திருத்தத்தை அன்றே ஆதரித்திருந்தால் நாம் சுயாட்சியை நோக்கி சென்றிருப்போம். எமது மக்கள் வலிகளை சுமந்திருக்க வேண்டிய அவலங்களும் இங்கு நடந்திருக்காது.

அரை குறை தீர்வு என்றும், உழுத்துப்போன தீர்வு என்றும் கூறி இதுவரை கிடைத்த அனைத்து தீர்வுகளையும் ஒதுக்கி வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வலிகளை உங்கள் மீது சுமக்க வைத்தார்கள். சுயாட்சியை நோக்கி நீங்கள் செல்லும் வழிகளை தோற்கடித்தார்கள்.

இது தமிழ் தேசியம் அல்ல. மாறாக மக்களின் வாக்குகளை அபகரிக்கும் வெறும் தேர்தல் கால வெற்றுக்கோசம் மட்டுமேயாகும். தமிழ் தேசியத்தை பாதுகாப்பவர்களாக இருந்திருந்தால், எம்மை போல் அவர்களும் மக்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும். உங்கள் துயரங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். உங்கள் நிலங்களை மீட்டுக்கொடுத்திருக்க வேண்டும். எமது தேசத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற உழைத்திருக்க வேண்டும்.

அர்த்தமற்ற பாசாங்கான எதிர்ப்பு அரசியல் எதையும் பெற்றுத்தராது. தமிழ் தேசியத்தின் நியாயமான அபிலாசைகளை துளியளவும் பாதுகாக்காது. சாணக்கிய தந்திர மதிநுட்ப சிந்தனை வழி நின்று அரசாங்கத்தை இணங்க வைத்து பேசியே எதையும் நாம் பெற முடியும்.

நல்லிணக்க உறவின் மூலமே சாதிக்க முடியும்

இன்று எமக்கிருக்கும் கடமை மாகாண சபையின் அதிகாரங்களை பாதுகாப்பதும், அதை பலப்படுத்துவதும், எமது அரசியல் இலக்கை நோக்கி செல்வதுமே ஆகும். இதை அரசுடனான நல்லிணக்க உறவின் மூலமே சாதிக்க முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையிடமோ, அன்றி சர்வதேச நாடுகளிடமோ முறையிடுவதாக கூறி எம்தேச மக்களை ஏமாற்றும் மாய மந்திரங்கள் ஒரு போதும் பலிக்காது.

அவ்வாறு முறையிட்டு அழுவதால் முன்னேற்றகரமாக எதுவும் நடக்கப் போவதும் இல்லை. இது எம்தேச மக்களை மறுபடியும் நரகப் படுகுழி நோக்கி தள்ளவே வழிவகுக்கும்.

சர்வதேச நாடுகளுக்கு எம் மீது அக்கறை இருந்திருந்தால் எமது மக்களை அழிவு யுத்தம் முள்ளி வாய்க்கால் வரை அள்ளி சென்ற போது சர்வதேசம் இங்கு அவலம் தீர்க்க வந்திருக்க வேண்டும். எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சகலரும் இங்கு வந்தார்கள்.

காலத்தை ஏமாற்று கோசங்களை நம்பி விடாதீர்கள்

ஆகவே சர்வதேச சமூகத்திற்கு ஒற்றுமையை காட்டுங்கள் என்று கூறும் வழமையான தேர்தல் கால ஏமாற்று கோசங்களை நம்பி விடாதீர்கள்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போதும் சர்வதேச சமூகத்திற்கு ஒற்றுமையின் பலத்தை காட்ட வாக்களியுங்கள் என்று கோசமிட்டனர்.

மக்களுக்கு தம் இதயத்தை திறந்து காட்டாதவர்கள் சர்வதேச சமூகத்தின் மீது பாசாங்காக நேசம் கொண்டிருப்பது போல் நடிப்பது தமது சொந்ந பந்த குடும்ப நலன்களுக்காகவே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்த உள்ளூராட்சி சபைகள் செயலிழந்து சோர்ந்து கிடக்கின்றன. உள்ளுராட்சி சபைகளையே நடத்த முடியாமல் திண்டாடுபவர்கள் மாகாணசபையை எப்படி எமது மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு நடத்தப்போகிறார்கள்?

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக நினைப்பது போல் உள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனவு இருக்கின்றது.

நாம் வெற்றி பெற்ற உள்ளுராட்சி சபைகள் மட்டுமே அதிக நிதி வளங்களோடு அபிவிருத்தியை நோக்கி செயற்பட்டு வருகின்றன.

இதற்கு காரணம் நாம் எமது மக்களின் பிரதிதிகளாக இருந்து உரிமைக்கு குரல் கொடுத்து, அரசாங்கத்தின் உறவுக்கு கரம் கொடுத்து வருகின்ற எமது ஆக்க பூர்வ இணக்க வழி முறையே ஆகும்.

என்றும் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மக்களின் அன்றாட துயர்களை துடைப்பவர்கள். அபிவிருத்தியால் எம் தேசத்தை தூக்கி நிறுத்துபவர்கள், அரசியல் தீர்வுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்துபவர்கள், இருப்பதை பாதுகாத்து, இன்னும் பெற வேண்டிய உரிமையை பெறுபவர்கள். வெற்று வீரம் பேசாது, மதி நுட்ப சிந்தனையில் செயற்படுபவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts