Ad Widget

கூட்டமைப்பு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது! லண்டனில் மாவை

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும்” இவ்வாறு லண்டன் வந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விருந்துபசார நிகழ்வொன்றின் போது தெரிவித்தார் என லண்டன் செய்திகள் தெரிவித்தன.

mava-london

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று ஒக்ரோபர் 2 லண்டன் வந்தார்.

ஒக்ரோபர் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் ஜேர்மனியில் நடைபெறும் உலகத் தமிழர் பண்பாட்டு பேரவையின் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் இவருக்கு இன்று மாலை கிழக்கு லண்டனில் வரவேற்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 2 இரவு ‘பி.ரி.எவ்.’ முக்கியஸ்தர் ரூட் ரவி, அதன் முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோரைச் சந்தித்ததன் பின் நிகழ்ந்த இராப்போசன விருந்துபசார நிகழ்விலேயே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார என லண்டன் செய்தகள் தெரிவித்தன.

‘ரெலோ’ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால் தங்கள் இயக்கத்தை கலைக்கப் போகிறார்கள் எனக் கூறியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?’ எனக் கேட்டதற்கே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“அப்படியானால் இதனை வெளிப்படையாக மக்கள் முன் சொல்லத் தயாரா?” என்று கேட்டபோது “இதைத் தெரிந்துதான் மக்கள் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். ஒரு கட்சியாக செயற்படுவதற்கும், கூட்டமைப்பாக செயற்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள்தான் உங்களைப் போன்று இந்தக் கேள்விகளை எழுப்புகின்றனர்” என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தனிக் கட்சியாக பதிவு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது” என்றும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்வோம் என்ற வாக்குறுதியை நானோ எனது கட்சித் தலைவர்களோ ஒருபோதும் வழங்கியதில்லை” என்றும் மாவை சேனாதிராஜா அங்கு தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அவரவர் விடுகின்ற அறிக்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கி ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள நிலையில் மாவை சேனாதிராஜா அது தொடர்ந்தும் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (சுரேஸ் அணி), தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகவே தனித்து இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts