Ad Widget

கூட்டமைப்பின் புதிய தலைமுறை தேர்தலை எதிர்கொள்ளும்: மாவை சேனாதிராஜா

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வினைத்திறன்மிக்க இளைஞர்களை களமிறக்கவுள்ளதாகவும் பலமான அணியாக களமிறங்கும் எனவும் தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணிகள் தொடர்பாக தமிழரசுக்கட்சி மற்றும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுக்கிடையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகசந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் தொடர்பாக இன்னும் ஓரிரு விடயங்கள் ஆராயப்பட வேண்டிய நிலையுள்ளதால், அவற்றினைத் தீர்மானித்த பின்னரே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐனநாயக போராளிகள் கட்சி உட்பட எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஏனைய இயக்கங்களுடனும் கலந்துரையாட வேண்டிய கட்டாயம் உள்ளது எனச்சுட்டிக்காட்டிய மாவை, அவர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் 05 ஆம் திகதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் பூரணப்படுத்தப்பட வேண்டியிருப்பதனால், மூன்று கட்சி சார்ந்த உறுப்பினர்களும் உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில், தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் நா.ஸ்ரீகாந்தா, வினோநோதாரலிங்கம், விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக ஆராயப்பட்டதன் அடிப்படையில், 80 சதவீதமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று நடைபெறவுள்ள தேர்தலில் 3 கட்சிகள் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஒன்றிணைந்து திரட்டுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts