Ad Widget

கூட்டமைப்பின் கூட்டம் சார்ச்சைகளை அடுத்து ஒத்திவைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் கடைசி நேரத்தில் அதனை ஒத்தி வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இனி, அந்தக் கூட்டத்தை எப்போது, எங்கு நடத்துவது என்பது குறித்து பெரும்பாலும் நாளை அல்லது அடுத்து வரும் நாட்களில் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இனிப் பெரும்பாலும் அந்தக் கூட்டம் திருகோணமலையிலேயே நடக்கும் எனச் சில வட்டாரங்கள் தெரிவித்தன. திடீரென இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுத்த முடிவு உள்வீட்டில் பல சார்ச்சைகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியமையை அடுத்தே இந்தக் கூட்டத்தை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிய வந்தது.

முதலில் இந்தக் கூட்டத்தை எதிர்வரும் சனியன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவது என்று நேற்று முடிவு எடுக்கப்பட்டதும் கிழக்கு மாகாண கூட்டமைப்பு வட்டாரங்களில் அந்த முடிவு பலத்த அதிருப்தியை உருவாக்கியது எனத் தெரிய வந்தது. ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இத்தகைய கூட்டுக் கூட்டம் இரண்டு தடவைகள் நடத்தப்பட்டன. இனி, அந்தத் தொடரில் அடுத்த கூட்டத்தை திருகோணமலையில் அல்லது அம்பாறையில் கூட்டுவது என அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்ததாம்.

ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு மாறாக, திடீரென மீண்டும் யாழ்ப்பாணத்திலேயே அத்தகைய கூட்டத்தைக் கூட்டும் முடிவு தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையால் எடுக்கப்பட்டிருக்கின்றது என்று கிழக்கு உறுப்பினர்கள் பொருமியிருக்கின்றனர். ஏற்கனவே, கிழக்கு மாகாணத்தவர்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகளில் புறமொதுக்கப்படுகின்றனர் என்றும், அதற்கு கிழக்கு மாகாணத்தின் கூட்டமைப்புப் பிரமுகர்கள் துணை போகின்றனர் என்றும் அமைச்சர் முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) போன்றோர் கிழக்கில் பெரிய அளவில் பிரசாரம் செய்து வருகின்றனர். போதாக்குறைக்கு ஜெனீவா ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸில் அமர்வு தொடர்பான பிரசார நடவடிக்கைகளுக்காக அங்கு சென்ற கூட்டமைப்புக் குழுவிலும், அண்மையில் தென்னாபிரிக்கா சென்ற கூட்டமைப்புக் குழுவிலும் கிழக்குக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற குறை அந்தப் பிரதிநிதிகள் மத்தியில் அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்தது.

அதேசமயம், கிழக்குப் பிரதிநிதிகள் ஏற்கனவே சனியன்று கிழக்கில் தத்தமது பிரதேசங்களில் பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்து அவற்றில் பங்குபற்றவும் இசைவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திடீரென முன்னறிவித்தல் ஏதுமின்றி அடுத்த இரண்டு நாள்களில் யாழ்ப்பாணத்தில் கூட்டம் என்ற அறிவிப்பால் கிழக்கு உறுப்பினர்கள் குழம்பிப் போயினர் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்களும் இந்த எம்.பிக்கள் – மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்படுவது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர் என தெரிய வந்தது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் தெரிவையும் வேட்பாளர் தெரிவையும் அதையொட்டிய ஏனைய விடயங்களையும் கையாள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வசிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை கூட்டமைப்பு உருவாக்கியிருந்தது. கூட்டமைப்பின் விடயங்களை அந்த உயர்மட்டக் குழுவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் முன்னெடுப்பது எனவும் அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்தக் கூட்டம் கடந்த ஒன்பது மாதங்களாகக் கூட்டப்படவேயில்லை. ஏனைய கட்சிகளின் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல், அக்கட்சிகளின் கலந்தாலோசனையின்றியே ஒரு தலைப்பட்சமாக சிலர் மட்டுமே அரசியல் விடயங்களைத் தீர்மானித்து விவகாரங்களைக் கையாளுகின்றனர் என மற்றைய கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.

‘ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டுங்கள் என்று கேட்டால், தலையாட்டிவிட்டு, அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் எம்.பிக்கள் – மாகாண சபை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தை அவசர அவசரமாகக் கூட்டுகின்றார்கள. அதைக் கூட்ட வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. அதற்கு முதல் ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டுங்கள். மற்றைய கட்சிகளின் நிலைப்பாடுகளையும் உள்வாங்குங்கள். எங்களுடனும் கலந்தாலோசனை செய்யுங்கள். முடிவெடுக்க முன்னர் எங்கள் பக்கக் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து விவாதியுங்கள்!’ – என்றெல்லாம் கேட்டுப் பார்த்துவிட்டோம். எதுவும் நடப்பதாகத் தெரிவில்லை. எனவே இந்தக் கூட்டுக் கூட்டத்துக்கு முன்னால் ஒருங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்டினால் மட்டுமே கூட்டுக் கூட்டத்திற்கு வருவோம் என்ற சாரப்பட எமது நிலைப்பாட்டை தீர்மானம் எடுப்போருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம் என்று அங்கத்துவக் கட்சி ஒன்றின் தலைவர் இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்தார்.

இத்தகைய சார்ச்சைகளின் பின்னணியிலேயே மேற்படி கூட்டுக் கூட்டத்தை இந்த சனிக்கிழமை நடத்தாமல் ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டம் இனிப் பெரும்பாலும் மே தினத்துக்கு முன்னர் திருகோணமலையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Related Posts