Ad Widget

குற்றச்செயல்களின் பின்னணியில் வடக்கு முதல்வர் என்கிறது மஹிந்த அணி!

இலங்கையில் இடம்பெறும் அனைத்து குற்றச்செயல்களின் பின்னணியிலும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுகிறாரா என சந்தேகிப்பதாக ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய, நல்லாட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் இரண்டு வாரங்களில் வடக்கில் செயற்படும் ஆவா குழுவை ஒழித்துக் காட்டுவதாக விக்னேஸ்வரன் கூறுகின்றார்.

அவ்வாறு இரண்டு வாரங்களில் குற்றச் செயல்களை குறைத்துக் காட்ட முடியுமென கூறியதால், தற்போது நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கு பின்னாலும் விக்னேஸ்வரன் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

மஹிந்த ஆட்சியில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்காமலேயே அனைத்து குற்றங்களையும் எம்மால் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு விதமாக காணப்படுகின்றது.

எனவே இதற்காக விக்னேஸ்வரனுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது மஹிந்தவின் ஆட்சியில் வடக்கில் பட்டாசு கொளுத்துவதற்குக்கூட ஒருவரும் இருக்கவில்லை.

ஆனால் இந்த அரசாங்கம் தற்போது சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தி ஒன்பது மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முற்படுகின்றது.

இதற்காக சுமந்திரன், ஜயம்பதி மற்றும் சுரேன் பெர்னாண்டோ ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர். எனவே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதன் மூலமே இவற்றை தடுத்து நிறுத்த முடியும்” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related Posts