Ad Widget

குறைந்தது 3 வாரங்களாவது நாட்டை முடக்கவேண்டும்!! அரச பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசின் பங்காளிக் கட்சிகள் 10 இணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளன.

குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு நாட்டைப் முடக்காமல் கோரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மருத்துவமனைகளினால் தாங்கமுடியும் அளவிற்கு குறைக்க முடியாது என்று அவர்கள் நம்புவதாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் 10 கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நமது இடதுசாரி முன்னணியின் தலைவர், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தலைவர், அமைச்சர் விமல் வீரவன்ச, தூய ஹெல உறுமயவின் தலைவர், அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரான் அலெஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர் ஜி.வீரசிங்க, இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் கடமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்கா ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டைப் பூட்டுவது தற்போதைய நோய்த்தொற்றின் சுழற்சியை உடைக்கக்கூடும் என்று அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடு இப்போது திறந்திருந்தாலும், தனிமைப்படுத்தல் மற்றும் நோயின் பயத்தில் நாடு செயலற்றதாகிவிட்டது என்று அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.

இது ஒரு தேசிய பேரிடர் என்பதால், அதை சமாளிக்க அனைத்து கட்சி பொறிமுறையும் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கின்றனர்.

அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் பொருளாதாரத் துறையின் வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கப்பட வேண்டும் என்று 10 கட்சிகளின் தலைவர்களும் பரிந்துரைத்துள்ளனர்.

Related Posts