Ad Widget

குராம் ஷேய்க் கொலை: நால்வருக்கு 20 ஆண்டு சிறை

குராம் ஷேய்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியான சம்பத் விதானபத்திரன உள்ளிட்ட நான்கு பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை அளித்துள்ளது.

sampath_vidanapathirana

இந்தக் கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இரண்டு பேரை, போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

பிரிட்டிஷ் பிரஜையான குராம் ஷேய்க், 2011-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் திகதி நள்ளிரவு நத்தார் பிறப்புக் கொண்டாட்டத்தின்போது தென்னிலங்கையில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட நீதிபதி ரோகிணி வெல்கம, இந்த வழக்கின் விசாரணை தாமதப்படுத்தப்பட்டுவருவதாக சில ஊடகங்கள் வெளியிட்டுவந்த விமர்சனங்கள் இன்றைய தீர்ப்பின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களை ஆராய்ந்து தனது மனசாட்சிக்கு அமையவே இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி தெரிவித்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டை செய்ய முன்னர், தாம் குற்றவாளிகளாக அல்லது நிரபராதிகளா என்பதை தமது மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளுமாறும் நீதிபதி தீர்ப்பு வழங்கப்பட்டவர்களிடம் கூறினார்.

இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதை பார்வையிடுவதற்காக 200க்கும் அதிகமானோர் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Related Posts