குப்பைகளை அகற்ற பணம் அறவிடும் யாழ்.மாநகர சபை : மக்கள் விசனம்

நீண்ட காலமாக குறிப்பிட்ட குப்பைகள் மாத்திரம் ஏற்றிவிட்டு ஏனையவற்றை வீதியிலேயே விட்டுவிட்டு செல்லும் யாழ்.மாநகர சபையின் செயற்பாட்டினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக யாழ்.கச்சேரி, சுவாட்ஸ் லேன் வீதியிலுள்ள குறிப்பிட்ட குப்பைகளை மாத்திரம் அகற்றிவிட்டு வாழைத் தண்டுகள், மரக்குற்றிகள் போன்றவற்றை ஏற்றுவதற்காக மக்களிடம் ஒரு தொகைப் பணத்தை கேட்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குறித்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் கேட்ட போது வீட்டுக் குப்பைகளை அகற்றுவதாயின் 300 ரூபா பணத்தை தருமாறும் கேட்டுள்ளனர். இதனால் மக்கள் உரிய பணத்தை கொடுக்காமையால் வீதியிலேயே குப்பைகளை விட்டுவிட்டு செல்லுகின்றனர்.

அத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த குப்பைகள் இருப்பதனால் அதிகாரிகள் வந்து பார்த்தால் உங்களிடமிருந்து 700 ரூபாவுக்கு மேல் தண்டப்பணமாக அறவிடுவார்கள் எனவும் அவர்கள் கூறிவிட்டுச் செல்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் கருத்து தெரிவிக்கையில்,

வீட்டுக் குப்பைகளில் குறிப்பாக வாழைக்குற்றி, வாழை இலைகள், ஏனைய மரத்தண்டுகள் ஆகியவற்றை அகற்றுவதாயின் மாநகர சபையின் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியோ அல்லது வீட்டு உரிமையாளர்கள் தங்களது சொந்த செலவில் வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்தோ குப்பைகளை அகற்ற வேண்டும் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதன் தெரவித்தார்.

இருப்பினும் கிலோ கணக்கில் வீட்டுக் குப்பைகள் இருந்தால் பணம் அறவிடலாம் ஆனால் அதற்கென்று எந்தவித கட்டணங்களும் அறவிடுமாறு நிர்ப்பந்திக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts