குடும்பஸ்தரை காணவில்லை! பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கடத்திச் சென்றனரா??

மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தர் நேற்று நள்ளிரவு முதல் காணாமல் போயுள்ளார்.

anton-deny

இவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே கடத்திச் சென்றுள்ளதாக அவரது மனைவி மதுவந்தி தெரிவித்தார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தனது கணவருக்கு தொடர்ச்சியாக விடுத்துவந்த அச்சறுத்தல் காரணமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் தங்கியிருந்ததாகவும் கூறிய அவர், கடந்த சில மாதங்களாக மன்னார் உயிலங்குளம் பங்குத்தந்தை லியோனின் பாதுகாப்பில் இருந்த நிலையில், நேற்று புதன் கிழமை நள்ளிரவு முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தார்.

அன்ரன் காணாமல் போனமை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கூறினார்.

கடந்த காலங்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் கொலை அச்சுறுத்லுக்கு மத்தியில் தனது கணவரும் தாமும் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கும் அன்ரனின் மனைவி, பல தடவைகள் மன்னார் பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் அலுவலகம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடமும் முறையிட்டிருந்த்தாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையிலேயே தனது கணவர் நேற்று நள்ளிரவு முதல் கடத்தப்பட்டிருப்பதாக மதுவந்தி செய்தி இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவரும் அன்ரன் காணாமல்போன சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

அத்துடன் இரண்டு மாதங்களுக்கு முன்னரே அன்ரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவது தொடர்பில் தன்னிடம் முறைப்பாடு செய்திருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் தெரிவித்தார்.

Related Posts