Ad Widget

குடும்பத்தாரின் காலை உணவிற்காக 9.4 மில்லியன் செலவிடப்பட்டதா? மஹிந்த பதில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தாரின் காலை ஆகாரத்திற்காக 9.4 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக வௌியான தகவல் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட ஒன்று என, அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவினர் வௌியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜபக்ஷ குடும்பத்தினர் ஹில்டன் ஹோட்டலில் இருந்து ஒரு வேளை உணவை பெற்றுக் கொள்ள 9.4 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், எனினும் அது இதுவரை செலுத்தப்படவில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியிருந்தார்.

பண்டார தனது குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வைத்த விலைப்பட்டியல் 2013 நவம்பர் மாதம் 11ம் திகதி ஹில்டன் ஹோட்டலால் வௌியிடப்பட்டது.

இது 2013 நவம்பர் மாதம் இடம்பெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் போது வந்திருந்த வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு முக்கியஸ்தர்களுக்காக உணவு வழங்க தயாரிக்கப்பட்ட விலைப்பட்டியல்.

இதன்போது பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் மற்றும் பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளின் தலைவர்கள், உள்நாட்டு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இவை அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தாரின் காலை ஆகாரத்திற்காக அல்ல.

இது, 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசை ஜனவரி 8ம் திகதி கவிழ்க்க கூறிய பொய்யைப் போன்ற மற்றுமொரு பொய்யாகும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts