Ad Widget

குடிநீர் வழங்கமாட்டோம் என்று கூறவில்லை – குருகுலராஜா

Kurukula -rajha-education ministorகிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கமாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என்று வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.

கீரிமலை நகுலேஸ்வரர் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பான ஆய்வினைத் தொடர்ந்து, ‘இரணைமடு குடிநீர் விநியோகம் தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன’ என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘நான் 1959 ஆண்டு தொடக்கம் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றேன். கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு வயோதிபரிடம் நான் முப்பது வருடங்களுக்கு முன்னர் தட்டுவன் கொட்டிப் பிரதேசத்திற்கான நீர் எவ்வாறு கிடைக்கிறது? இதைக்கொண்டு எவ்வாறு விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றீர்கள்? என்று கேட்டிருந்தேன்.

அதற்கு அந்த வயோதிபர் ‘இரணைமடுவிலிருந்து வருகின்ற நீரினைக் கொண்டு தான் நாங்கள் எங்கள் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றோம். வருடம் பூராகவும் இரணைமடுவில் இருந்து எங்களுக்கு நீர் கிடைக்கும். கோடைகாலத்தில் கூட ஆற்றுக் கரையோரங்களில் கைகளால் விறாண்டும் போது தண்ணீர் வரும் இல்லாவிட்டால் கொஞ்சம் தோண்டி துரவுகள் அமைத்து எங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். இதனைப் பயன்படுத்தி தட்டுவன் கொட்டிப்பிரதேசத்தில் கோடைகாலத்தில் மிளகாய் உற்பத்தி செய்து வந்தோம்’ என எனக்குத் தெரிவித்தார்.

இரணைமடுக்குளம் காலங்காலமாக நீரைத் தேக்கி எல்லா மக்களுக்கும் வழங்கி வந்தது. இரணைமடுக்குளம் மழைபெய்து, குளம் நிரம்பி வழிகின்ற தண்ணீர் ஆனையிறவு மற்றும் சுண்டிக்குளம் பகுதிக்கும் செல்கின்றமை வழமை.

இவ்வாறு செல்லும் நீரில் சுண்டிக்குளத்தில் இறாலும் ஆனையிறவில் மீன்களும் உற்பத்தியாகும். இதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு இரணைமடுவிலிருந்து வெளியேறுகின்ற நீரை தடுத்து சேமிப்பதற்கு தான் ஆறுமுகம் என்ற பொறியியலாளர் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்போதிருந்த அரசாங்கங்கள் அதனைப் படித்து அதனைச் செயற்படுத்த முன்வரவில்லை.

தொண்டமனாற்றுப் பகுதியில் கடல்நீர் உட்புகாதவாறு தடுப்பு அரண் கட்டியிருக்கின்றோம். இதன் மூலம் கடல்நீர் நன்னீர் ஆக்கப்பட்டு அங்கு வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இரணைமடுக்குளத்தில் மாரி காலத்தில் நீர் நிலை உயர்வடைந்து வான்கதவுகள் திறக்கப்படும் போது வெளியேறுகின்ற நீரை தடுத்து சேமித்து அதனை நன்னீர் ஆக்கி யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்த முடியும்.

இவ்வாறான திட்டத்தை நடைமுறைப்படுத்தி எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் இரணைமடுவில் இருந்து நீரை யாழ்.குடாநாட்டுக்கு வழங்கலாம். இது தான் கிளிநொச்சி மாவட்ட மக்களின் நிலைப்பாடே தவிர நாங்கள் ஒரு போதும் யாழ்ப்பாணத்திற்கு நீர் வழங்கமாட்டோம் என்று சொல்லவில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts