Ad Widget

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியானது சுழற்சிமுறையில் வகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இரண்டரை வருடங்களின் பின்னர் இப்பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது எனவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு அமைச்சு பதவிகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அமைச்சு பதவி கிடைக்காமல் விடுபடும் மூன்றாவது மாவட்டத்திற்கு தேவையான அரசியல் அந்தஸ்து கட்சியினால் பலப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு அமைச்சு பதவிகளும் கட்சியின் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

எனினும், எந்த அமைச்சு பதவியை பெறுவது மற்றும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரைவில் தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

“தார்மீக மற்றும் அரசியல் காரணங்களால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதற்கு இறுதியில் நாம் தீர்மானித்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எமது ஆதரவைக் கோரியிருந்தது.  அவர்கள் முதலமைச்சர் பதவியையும் எமக்கு வழங்க முன்வந்தனர். எனினும் நாம் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதற்கு நாம் முயற்சிப்போம்.” என அவர் கூறினார்.

இதேவேளை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts