Ad Widget

கிழக்கு மாகாண ஆட்சி ! மு.காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி!

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பு பலம் இழந்துள்ள நிலையில் மாகாணசபையில் பெரும்பான்மையினை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன்கீழ் நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.அதன் ஒரு அங்கமாக இன்றும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

நாங்கள் அனைத்து உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபையில் அதிகார பங்கீட்டுக்கு அமைவாக முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.

ஆனால் இது தொடர்பில் ; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனான பேச்சுவார்த்தையில் எதுவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

Related Posts