Ad Widget

கிரிக்கெட்டில் களம் இறங்கும் பெண் நடுவர்கள்!

கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது ஐ.சி.சி. இன்று முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை, தாய்லாந்தில் நடக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு, இந்நால்வரும் நடுவர்களாக செயல்படவுள்ளனர்.

ICC appoints four female umpires

உள்ளூர் மகளிர் போட்டிகளில் மட்டும் அதிகப்படியாக பெண் நடுவர்கள் செயல்பட்டு வந்த நிலையில், ஒரு சர்வதேச தொடருக்கு நான்கு பெண் நடுவர்களை ஐ.சி.சி நியமிப்பது இதுவே முதல் முறையாகும்.

நியூசிலாந்தைச் சார்ந்த கேத்தி கிராஸ், ஆஸ்திரேலியாவின் க்ளேர் பொலோசக், இங்கிலாந்தின் சுயூ ரெட்ஃபெர்ன் மற்றும் ஜமைக்காவின் ஜாக்குலின் வில்லியம்ஸ் ஆகியோர்தான் ஐ.சி.சி.யின் அதிகாரப்பூர்வ நடுவர் குழுவிலுள்ள அந்த நால்வர் ஆவர்.

ஆடவருக்கான விளையாட்டு என்றே கருதப்பட்ட கிரிக்கெட்டில் மெல்ல பெண்களும் பங்குபெறத் தொடங்கினர். மகளிருக்கும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. 1934-ம் ஆண்டே அதிகாரப்பூர்வமாக மகளிர் கிரிக்கெட் தொடங்கினாலும், அப்போட்டிகளின் நடுவர்களாய் ஆண்களே இருந்து வந்துள்ளனர்.

ஒருசில சர்வதேச மகளிர் போட்டிகளில் ஒரு பெண் நடுவர் மட்டும் செயல்பட்டுள்ளனர். இந்நிலையில்தான் இவ்விளையாட்டில் பெண்களின் பங்கீட்டையும், பெண்களிடையே இதன் மீதான ஆர்வத்தையும் அதிகரிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இம்முடிவை எடுத்துள்ளது.

இவர்களில் மிகவும் அனுபவம் உடையவரான கிராஸ், 2014 -ம் ஆண்டில் ஐ.சி.சி நடுவர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். 58 வயதான கிராஸ், 1998-ம் ஆண்டு முதல் உள்ளூர் போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவர் 2000, 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த மகளிர் உலகக்கோப்பை போட்டிகளில் நடுவராக பங்கேற்றுள்ளார்.

ஐ.சி.சி.யின் இந்த முடிவு பற்றி அவர் கூறுகையில், “ஒவ்வொரு தொடரும் மகளிர் கிரிக்கெட்டிற்கு புதிதாய் ஏதாவது ஒன்றை கொடுத்த வண்ணம் உள்ளன. ஐ.சி.சி.யின் இம்முடிவு பெண் நடுவர்களின் தரம் உயர்ந்துள்ளதை பறைசாற்றுகிறது.

நான் உலகில் நிறைய இடங்களில் நடுவராக பணியாற்றியுள்ளேன். நான் மட்டுமே பெண் நடுவர் என்பதால் மைதானத்தில் தனியாக நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், இனி அப்படி இருக்காது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய நாட்டவரான க்ளேர் பொலோசக் ஒரு அறிவியல் ஆசிரியை. 27 வயதே ஆன இவர், மிக இளம் வயதில் நடுவராக பணியாற்றியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான மெடடோர் கோப்பையில் நடுவராக நின்று, அந்த சாதனையை தன் வசம் கொண்டு வந்தார். இப்போது மேலும் ஒரு புதிய சகாப்தம் படைத்திருக்கும் க்ளேர், “நான் நடுவராக முதல் முதலில் நின்றபோது எனக்கு வயது 15. இப்போது அடைந்திருக்கும் உயரத்தை நான் எட்டுவேன் என்று அப்போது நினைத்திருக்கவில்லை. என்னோடு பணியாற்றப்போகும் அனுபவம் வாய்ந்த சீனியர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று கூறுகிறார்.

இங்கிலாந்து அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும், 15 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர் சுயூ ரெட்ஃபெர்ன். இடது கை சுழற்பந்து வீச்சாளரான சுயூ, தனது 17 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியாவுக்கு எதிராக 1995ல் தொடங்கிய இவரது கிரிக்கெட் பயணம், 1999ல் இந்தியாவுக்கு எதிராகவே நிறைவுற்றது. பின்னர் இரண்டாம் தர கவுன்டிப் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய இவருக்கு தற்போது சர்வதேச அரங்கில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

39 வயதான ஜாக்குலின் வில்லியம்ஸ்தான் கரீபியத் தீவுகளிலிருந்து வரும் முதல் பெண் நடுவராவார். ஜமைக்கவைச் சார்ந்த வில்லியம்ஸ் கூறுகையில், “என்னால் இதை நம்பவே முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த சில மாதங்களாக நான் செய்த கடின உழைப்பிற்குக் கிடைத்த பரிசு இது. இத்தொடரில் என் சிறப்பான பணியைத் தொடர்ந்து செய்வேன்” என்றார். கடந்த ஜூன் மாதம் டிரினிடாட்டில் நடந்த நடுவர்களுக்கான பயிற்சி முகாம் இவருக்கு பெரிதும் துணை புரிந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனும், ஐ.சி.சி மகளிர் கமிட்டியின் செயலருமாகிய க்ளேர் கான்னர் கூறுகையில், “உலக டி20 தொடருக்கு நான்கு பெண் நடுவர்களை நியமித்திருப்பது மகளிர் கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கான மிகப்பெரிய படி. இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டின் அடையாளம் மாறும். கடந்த சில காலமாகவே மகளிர் கிரிக்கெட்டில் மாற்றங்களைப் புகுத்த ஐ.சி.சி முனைந்து வருகிறது. இதை அப்படியே தொடர வேண்டும். பெண் நடுவர்களை நன்கு ஊக்குவிக்க வேண்டும். கண்டிப்பாக பெண்கள் கிரிக்கெட் மிகப்பெரிய உயரத்தை எட்டும் ” என்று ஐ.சி.சி யின் இம்முயற்சியைப் பாரட்டினார்.

மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் என பல்வேறு சர்ச்சைகளினால் தனது மதிப்பை இழந்து வந்த ‘ஜென்டில்மேன்ஸ் கேம்’ கிரிக்கெட்டின் இமேஜை சரிசெய்ய ஐ.சி.சி பல முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீப காலங்களாக ரசிகர்களிடையே கிரிக்கெட் மீதான ஈடுபாடு குறைந்து விட்டதால், விளையாட்டில் பல மாற்றங்களை புகுத்தி வருகிறது ஐ.சி.சி. புதிய பவர் பிளே விதிமுறைகள், ஃப்ரீ ஹிட் எனத் தொடங்கி, நேற்று நடந்த முதல் பகலிரவு போட்டி வரை சமீபத்திய மாற்றங்கள் ஏராளம். அவ்வகையில் பெண்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஈர்க்க இது ஐ.சி.சி.யின் அடுத்தபடி.

சரி இருக்கட்டும்… மகளிர் மட்டும்’ படத்தில் ஊர்வசி சொல்வது போல், ’லேடீஸ் பஸ்ல டிரைவரும் லேடீஸாதான இருக்கணும்?’ பெண்களும் முன்னேறனும்ல…

Related Posts