Ad Widget

கிரிக்கட் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு ஜனாதிபதி முழுமையான ஒத்துழைப்பு

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மற்றும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருடனும் சுமுகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, கிரிக்கட் விளையாட்டின் மேம்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் கிரிக்கட் விளையாட்டுத்துறை பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

கிரிக்கட் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பங்களிப்புகள் இங்கு நன்றியுடன் நினைவுகூரப்பட்டது.

வருகைதந்த அனைவருக்கும் ஜனாதிபதியினால் இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கிரிக்கட் போட்டிகளில் வெற்றிபெற்ற கிரிக்கட் அணி வீரர்களுடன் ஒரு புகைப்படத்திற்கும் தோற்றினார்.

ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவர் சஹர்யார் எம் கான், பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவர் அமைச்சர் நஸ்முல் ஹசன், நிறைவேற்று அதிகாரி நிஜாமுத்தீன் சௌத்திரீ ஆகியோரும் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts