Ad Widget

காவற்றுறையினரின் செயற்பாடுகள் குறித்து வாகன உரிமையாளர்கள் விசனம்

யாழ். மாவட்டத்தில் காவற்றுறையினரால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளினால் வாகன உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் காவற்றுறையினர் வாகனங்களை மறித்து வாகன வரிப் பத்திரத்தை சோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்போது, காவற்றுறையினரால் வாகன உரிமையாளர்கள் தேவையற்ற பல நெருக்கடிகளுக்கு ஆளாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற போதிலும் சம காலத்தில் அனைவருக்கும் வரிப்பத்திரத்தை வழங்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில், வாகனங்களின் வரிப்பத்திரம் சம்பந்தமாக வட மாகாண பொது நிர்வாக அமைச்சின் பிரதம செயலாளரினால் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி வரை வாகன அனுமதிப்பத்திரம் சம்பந்தமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரிப்பத்திரம் வழங்கும் அலுவலக வாசல்களில் அது சம்பந்தமான அறிவித்தல்கள் பொது மக்களின் நன்மை கருதி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் காவற்றுறையினர் வீதிக்கு வீதி வாகனங்களை மறிப்பதும் வாகன சாரதிகள் மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகிப்பதும் எவையும் சரிவராத நிலையில் இல்லாத குற்றச்சாட்டுக்களையும் சிங்களத்தில் எழுதி பற்றுச் சீட்டுக்களை வழங்கி தபாலகத்தில் பணத்தை செலுத்துங்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வாருங்கள் என்று பணித்துவிட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை பறித்துச் செல்லும் நிலமையும் தொடர் கதையாகவே உள்ளது.

பட்டப்பகல் வேளையில் கூட மோட்டார் சையிக்களுக்கு முகப்பு விளக்கு இல்லையென குற்றம் சுமத்தி பற்றுக் சீட்டு வழங்கி துன்பத்திற்குள்ளாகிய நிலமையும் கூட ஏற்பட்டுள்ளதாகவும் இதனையிட்டு உரிய அலுவலகங்களுக்கும் காவற்றுறை பொறுப்பதிகாரிகளுக்கும் முறையிட்டுள்ள போதிலும் யாரும் இதனையிட்டு கவனம் எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அநியாயமான முறையில் பணத்தை விரயம் செய்ய விரும்பாத வாகன சாரதிகள் நாளாந்தம் பிரதேச செயலகங்களுக்கும் உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களுக்கும் அதிகாலை முதல் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலைச்சலை நிறுத்தக் கூடியதாக நாளாந்தம் வழங்கப்படும் வரி செலுத்துவதற்கான இலக்கத் துண்டுகளையேனும் தொடர் இலக்கமாக வழங்கி குறிப்பிட்ட நாளையும் தெரிவித்தால் அனைவரும் அலுவலக நாட்களில் வந்து இலக்கத் துண்டைப் பெறுவதுடன் உரிய நாளில் வந்து வரிக்கான அனுமதிச் சீட்டைப் பெற்றுச் செல்ல முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட அலுவலகங்கள் நாளாந்தம் 50 முதல் 100 இலக்கங்கள் வரையே வரி செலுத்துவதற்கான இலக்கத் துண்டுகளை வழங்கி வருகின்றன. அத்துடன் சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் உள்ள அலுவலகம் ஒன்று தனது பிரிவு வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரத்தை வழங்கி முடிக்க ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு மேல் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts