Ad Widget

காணி பறிப்புக்கு எதிராக திக்கம் மக்களும் வழக்கு

ARMY-SriLankaபருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் திக்கம் பகுதியில், இராணுவ முகாம் அமைப்பதற்குத் தங்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராகக் காணி உரிமையாளர்கள் 31 பேர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர்.

இதே போன்று ஆனைக்கோட்டை கூழாவடிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராகவும் அப்பகுதி மக்கள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் J/400 கிராம சேவையாளர் பிரிவில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின் 16 ஆவது விஜயபாகு காலாட் படைமுகாம் அமைப்பதற்காகச் சுகவீகரிக்கும் அறிவித்தல்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஒட்டப்பட்டிருந்தன.

இதன் தொடர்ச்சியாகக் குறித்த காணிகளை அளவீடு செய்யச் சென்ற நிலஅளவையாளர்களைக் காணி உரிமையாளர்கள் திருப்பி அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நேற்று மாலை சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மக்களின் வழக்குத் தாக்குலுக்குரிய பதிவுகளை மேற்கொண்டனர்.

இதேபோன்று குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட மக்கள் முன்வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts