Ad Widget

காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

அரசியல் யாப்புக்கு முரணான விதத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணை போகும் வர்த்தமானி அறிவித்தலை (1882/6 இலக்கம் – 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதி) ரத்து செய்ய கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு, கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, ஆளுங்கட்சி உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் கொண்டுவந்த இந்தப்பிரேரணையை, ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்மொழிந்தார்.

பிரேரணையை முன்வைத்து, சிவமோகன் உரையாற்றுகையில், ‘புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு மக்களை தற்காலிகமாக இடம்பெயரச் செய்து, அவர்களை வவுனியா செட்டிக்குளத்தில் முட்கம்பிக்குள் அடைத்து விட்டு, இராணுவம் தன்னிச்சையாக அந்த மக்களின் பூர்வீக காணிகளை கபளீகரம் செய்துள்ளது’ என்றார்.

அத்துடன், ‘மக்கள் மீளக்குடியமர்ந்த போதும், மக்களுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு கிழக்கு கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட 3.1363 ஹெக்டேயர் காணி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் விஸ்வமடு, தொட்டியடி, சுதந்திரபுரம், கிளிநொச்சிக்காடு ஆகிய பிரதேசங்களிலும் பல காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

காணி அபகரிப்புக்கு முன்னர், வடமாகாண சபை காணி அமைச்சர் என்ற முறையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் விதப்புரை பெற வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படாமலே அபகரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த, ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், ‘இந்த பொய்யான மற்றும் சட்டவிரோதமான செயற்பாட்டை நிரூபிக்க முதலமைச்சர் சட்டரீதியாக அணுக வேண்டும். தெளிவான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளதால், நாம் நீதிமன்றில் வழக்கு தொடரலாம்.

இந்தக் காணிகள் என்ன அடிப்படையில் அபகரிக்கப்படுகின்றது என்பது தொடர்பில், எதுவும் தெரியப்படுத்துவதில்லை. ஒவ்வொரு காணி அபகரிப்புக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்கு தொடரவேண்டி நிலை கட்டாயம் தேவைப்படுகிறது’ என்றார்.

இதற்கு பதிலளித்த முதமைச்சர், ‘காணி அபகரிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நாம் கவனித்துவருகிறோம். கொழும்பிலிருந்துதான் இது போன்ற நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணி சுவீகரிப்புக்கு எதிராக நாம் இதுவரையில் வலி.வடக்கு காணிகளுக்காக மாத்திரம் 200 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். நீதி மன்றிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என்றார்.

‘இது அரசியல் ரீதியான விடயம் என்பதால், அரசியல் ரீதியாக அணுக வேண்டும். இராணுவம் அபகரித்துள்ள காணியை மீட்டு தருவதாக குறித்த ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர். என்ன அடிப்படையில் நன்மை பெறலாம் என்பதிலேயே அரசியலில் பலர் செயற்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு பதிவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, ‘இது அரசியல் அமைப்புக்கு முரணானது என்றால் கட்டாயம் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதனை தான் ஆதரிப்பதாக’ கூறினார். இதனையடுத்து இந்த பிரேரணை ஏகமனதாக சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Related Posts