Ad Widget

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதிக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை இல்லை – சுமந்திரன்

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே இரண்டு கடிதங்களை அனுப்பியதாகவும் எனினும் இதுவரையில் இந்த விடயம் குறித்து ஜனாதிபதியிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக இந்த விடயம் குறித்து எழுத்து மூலமாக அறிவித்தும் சமல் ராஜபக்ஷவுடன் சந்திப்புக்களை மேற்கொண்டும் தொடர்ச்சியாக காணி அபகரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாகவே, இவ்வாறு இன்று போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அவர்களுடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த போராட்டத்தின்போது அடையாளம் தெரியாத நபரொருவர் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்ததாகவும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை என்றால், ஏனைய மக்களின் வாழ்க்கை நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.

Related Posts