Ad Widget

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றங்களின் ஊடாகத் தீர்வு – முதலமைச்சர்

vicky0vickneswaranவடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை காணிப் பிரச்சினை என்பது தீர்க்கப்படமுடியாத பெரும் பிரச்சினையாக நீண்டு செல்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம்.

தீர்வுகள் எட்டப்பட முடியாத காணிப்பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றங்களின் ஊடாக தீர்வு காண்பது என்று தீர்மானித்துள்ளோம் இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

யாழ்.பொதுநூலக வளாகத்தில் உள்ள மாகாண சபைக் கட்டடத்தில் நேற்றுப் பிற்பகல் இடம் பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வட பகுதியில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காணிப்பிரச்சினை. இடம் பெயர்ந்த மக்கள் தங்களின் இடங்கள் தெரியாமல் வேறு இடங்களில் சென்று குடியேறுகின்றனர். அதேவேளை அரச தரப்பினரும் மக்களை குடியேற்றுகின்றனர்.

அதனால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச் சினை நீண்டு கொண்டே செல்கின்றது. அதே வேளை இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கு சென்று மீள்குடியேறி வாழ முடியாத நிலையும் காணப்படுகின்றது.

அத்தோடு ஒரு காணிக்கு இரண்டு மூன்று பேர் உரிமை கோரும் போது யாருக்கு அந்தக்காணி சொந்தம் என்பதில் பிரச்சினை எழுகின்றது. இப்படிப்பட்ட சந்தர்ப் பத்தில் காணிகள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பது தொடர்பாக மாகாண காணி ஆணையாளர் விளக்கமளித்துள்ளார். ஆயினும் காணிப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்படவில்லை.

வடக்கிலுள்ள அரச காணிகளை யார் குத்தகைக்கு கொடுக்க முடியும்? மத்திய அரசுக்கா, மாகாண சபைக்கா அந்த அதிகாரம் உள்ளது என்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளதால் அவைகளும் கருத்தில் எடுக்கப்படவேண்டியுள்ளது.

தீர்வுகள் எட்டப்பட முடியாத காணிப் பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றங்களின் ஊடாக தீர்வு காண்பது என்று தீர்மானித்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

Related Posts