Ad Widget

காணிகள் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கூற்றை ஏற்க மக்கள் மறுப்பு

முல்லைத்தீவு – கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வழங்கியதை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், காணி விரைவில் விடுவிக்கப்படும் என கூறியமை தொடர்பான தகவலை, கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் நேரில் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு காணி விடுவிப்பு தொடர்பில் டி.எம்.சுவாமிநாதன் ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடியதாக மீள்குடியேற்ற அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்ட விமானப்படைத் தளபதியுடன் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். குறித்த காணியை உடனடியாக விடுவிக்க முடியும் என விமானப்படைத் தளபதி ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ள போதிலும், காணி விடுவிக்கப்படும் உரிய திகதி குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் இன்று 15ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற அரசாங்க அதிபர் ஜனாதிபதியின் கருத்து குறித்து மக்களிடம் தெரியப்படுத்தினார்.

எனினும் அரசாங்க அதிபரது கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts