Ad Widget

காணாமல் போனவர்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெயர்?

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனுடைய பெயரை, இறுதிக் கட்ட ஈழப் போருக்குப் பின்னர் காணாமல் போனோர் தொடரபான அலுவலகத்தில் பதிவு செய்ய தான் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

THALAIVAR -pirabakaram

பிரபாகரனின் சகோதர, சகோதரிகள் சம்மதம் தெரிவித்தால் இதைச் செய்ய தான் ஆயத்தமாக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மிகக் கொடூரமான இன அழிப்பை ராஜபக்சே கும்பல் மேற்கொண்டது. இந்தப் போரின் இறுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறி ஒரு உடலை இலங்கை ராணுவம் காட்டியது. ஆனால் அது பிரபாகரனைப் போல இல்லாத காரணத்தால் அந்த உடலையும், அதுதொடர்பான படங்களையும் உலகத் தமிழர்கள் நம்பவில்லை.

மேலும் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதற்கான வலுவான ஆதாரத்தையும் இலங்கை அரசு இதுவரை வெளியிடவில்லை. மரணச் சான்றிதழைக் கூட அது தரவில்லை. இதனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே பெரும்பாலான தமிழர்கள் நம்புகின்றனர். அவர் வெளிநாட்டில் மறைந்து வாழ்வதாகவும், உரிய நேரத்தில் வெளியே வருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது பல்வேறு சூழ்நிலைகளில் காணாமல் போனதாக கூறப்படும் 65 ஆயிரம் பேரை கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்திருந்தது. அதன்படி காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டது.

இந்த மசோதா கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டபோது முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் அடங்கிய கூட்டு எதிர்ப்புக் குழு கடுமையாக எதிர்த்தது. இது ராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயல் என்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறியது. இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் வரைவு மசோதா வாக்கெடுப்பின்றி ஒருமனதாக நிறைவேறியது.

இதையடுத்து, இதனை சட்டமாக்கும் நடவடிக்கையை அரசு தொடங்கியது. முதல்கட்டமாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா இந்த மசோதாவில் கையொப்பமிட்டார். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாமல் சபாநாயகர் இந்த சட்ட மசோதாவினை சட்டமாக்குவதற்கு ஒப்புதல் அளித்தார். எனவே, காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பதற்கென்று விரைவில் தனிஅலுவலகம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காணாமல் போனவர்கள் அலுவலகத்தில் பிராபகரன் பெயரை பதிவு செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈழத்தைச் சேர்ந்த வானொலி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தலைவர் பிரபாகரனின் சகோதரரோ, சகோதரியோ முன்வந்தால் அவர்கள் சார்பாக காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பிராபகரன் பெயரை பதிவு செய்ய தயாராக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts