இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்தோனேஷிய மீன்பிடிப் படகில் இருந்த 25 இந்தோனேசியப் பிரஜைகள் MV MOONSTONE கப்பலினால் மீட்கப்பட்டுள்ளனர்.

KM ‘GARUDA JAYA VI’ என்ற இந்தோனேஷிய மீன்பிடிப் படகு, கடந்த 22ஆம் திகதி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால் அதில் இருந்த இந்தோனேஷியப் பிரஜைகள் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆபத்தில் சிக்கியவர்களில் 25 பேரை MV MOONSTONE கப்பல் மீட்டுள்ளதுடன், அவர்களை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், மீட்கப்பட்டவர்களை கரைக்கு அழைத்து வருவதற்காக கடற்படையினர் இரண்டு படகுகளை அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கமைய, MV MOONSTONE கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 25 இந்தோனேஷியப் பிரஜைகளும் கடற்படைக் கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்தோனேஷிய தூதரகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.