Ad Widget

கல்வி ஆலோசனை நிறுவன இயக்குனருக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் மத்திய கல்லூரிக்கும் வேம்படி பெண்கள் பாடசாலைக்கும் இடைப்பட்ட சந்தியில் உள்ள வீடொன்றில் வழிகாட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார்.

“யாழ்ப்பாணத்தில் இளையோருக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்துள்ளார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த நிறுவனத்திடம் பல இலட்சம் ரூபா பணத்தைச் செலுத்தி வெளிநாட்டு கல்வி வாய்ப்புக் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அத்துடன் கடந்த 02ம் திகதியும் நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பொலிஸ் பிரிவிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாடுகளின் பிரகாரம், நிறுவனத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் மற்றும் சட்டத்தரணி வி.கௌதம் ஆகியோர் முன்னிலையாகினர்.

” சந்தேகநபர் வெளிநாட்டு கல்வி வாய்ப்பையும் அதற்கான நுழைவிசா (VISA) பெற்றுத்தருவதாகவும் முறைப்பாட்டாளரிடம் 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபாவையும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்றுள்ளார்.

எனினும் சில மாதங்களாகியும் வெளிநாட்டுக் கல்விக்கான அனுமதியையும் நுழைவிசாவையும் பெற்றுக்கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்துள்ளார்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

“முறைப்பாட்டாளருக்கு 6 இலட்சம் ரூபா பணத்தை சந்தேகநபர் வழங்கவேண்டும். அதனை மீளச் செலுத்துவதற்கு அவர் தயாராகவுள்ளார். எனவே முறைப்பாட்டாளருக்கு பணத்தை மீள வழங்க தவணை வழங்கி பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபரின் சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

முறைப்பாட்டாளரின் பணத்தை முழுமையாக செலுத்தும்வரை சந்தேகநபருக்கு பிணை வழங்க முடியாது என அறிவித்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபரை வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, ஒரு முறைப்பாட்டாளரின் வழக்கை மாத்திரமே பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts