Ad Widget

கல்லுடைக்கும் சுரங்கத்தால் முத்தையன்கட்டுக் குளத்துக்கு ஆபத்து – விவசாய அமைச்சர்

முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி , நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

04

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்,

முத்தையன்கட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (04.03.2014) நிகழ்ந்த வயல் விழாவில் பங்கேற்பதற்காக நான் சென்றிருந்த போது அப்பகுதியில் புதிதாகச் செயற்பட ஆரம்பித்திருக்கும் கல்லுடைக்கும் சுரங்கத்தளம் பற்றிச் சிலர் எனது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்ட நான் இது தொடர்பாக எனக்கு அறிக்கையிடுமாறு முல்லைத்தீவு மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் ந.ஸ்ரீஸ்கந்தராஜாவிடம் கேட்டிருந்தேன்.

07

அவர் எனக்குச் சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில், தென் இலங்கையைச் சேர்ந்த சிநோட்ரோ என்னும் நிறுவனத்தால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் கல்லுடைக்கும் சுரங்கத்தளம் முத்தையன்கட்டுக் குளத்தின் குளக்கட்டு மட்டத்தில் இருந்து மூன்று மீற்றர் தூரத்திலும், குளத்தின் உயர்மட்ட வெள்ளம் பிடிக்கும் தூரத்தில் இருந்து நூற்றிஇருபது மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

01

இந்த அளவீடுகளின்படி இச் சுரங்கத்தளத்தைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு எதிர்காலத்தில் மிகப் பெரும் ஆபத்தாக அமையும்.

02

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தால் இப்பகுதியில் 25 அடி ஆழம் வரை பாறைகளை உடைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அகழப்படின் குளத்தின் நீர் இப்பகுதிக்குள் புகுந்துவிடும் ஆபத்து ஏற்படும். குளத்துக்கான நீர்வரத்துப் பாதையினையும் இந் நடவடிக்கை தடை செய்வதாக அமைந்துவிடும். அத்தோடு, கல்லுடைக்கும்போது பயன்படுத்தப்படும் வெடி மருந்தின் உரத்த அதிர்வினால் சுற்றயலில் உள்ள பாறைகளில் வெடிப்பு ஏற்படும். முத்தையன்கட்டுக் குளத்தின் குளக்கட்டு மற்றும் கலிங்கு பாறைகளின் மேலேயே அமைக்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளால் இவற்றின் அத்திவாரமே பாதிப்புக்கு ஆளாகும். இவற்றின் பிரதிபலிப்பு முத்தையன்கட்டுக் குளம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடித்துவிடும் என்பதால் சுரங்க அகழ்வு வேலைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது. இதற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக நிறுத்துமாறு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகத்துக்கும், முல்லைத்தீவு மவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வடமாகாண பிரதிப்பணிப்பாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம்.

06

முத்தையன்கட்டுக் குளத்துக்கு அருகாமையில் சுரங்கத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசின் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் இப்பிரதேசம் தொடர்பாக விரிவாகத் தெரிந்து வைத்திருக்கும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் எவ்வித கலந்தாலோசனையுமின்றித் தான்தோன்றித்தனமாக அனுமதி வழங்கியுள்ளது. இது கண்டனத்துக்குரியது. வடக்கில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதுவாக இருப்பினும் மாகாண நிர்வாகத்தின் அனுசரணையுடன் செயற்படுத்துவதே பொருத்தமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts