கறுப்பு உடையை போட்டுக் கொண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் சாதனை!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதத்தை பல்கலைக்கழக மாணவர்கள் சீராய்வது சிறந்தது. கறுப்பு உடையை போட்டுக் கொண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே மாணவர்களின் சாதனை” இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நினைவேந்தலை இம்முறை தாங்கள் செய்யவேண்டும் எனக் கேட்டார்கள். சரி அடுத்த முறை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேறு பீடத்திடம் செல்கிறது. அந்த பீடத்தில் பெரும்பாலானவர்கள் சிங்கள மாணவர்கள். அப்போதும் இவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்ய இயலுமா?” எனவும் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசியல்வாதிகள் வரவேண்டாம் என கூறுவதற்கும் ஒரு முறை இருக்கின்றது. அந்த முறையை பல்கலைக்கழக மாணவர்கள் தவறவிட்டுள்ளனர். அரசியல்வாதிகளை நிராகரிக்கவேண்டும் என்றால் அரசியல்வாதிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. இந்த மக்களிடமிருந்து வாக்குகளை பெற்ற மக்கள் பிரதிநிதிகள். அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மதிப்பை வழங்கவேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்கப்படவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனியே பல்கலைகழக மாணவர்களால் நடாத்தப்படவில்லை. வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் 36 பேர் தலா 7 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் வழங்கினார்கள். யாழ்.வர்த்தக சங்கம் ஈகை சுடர்களுக்கான துணியை வழங்கியிருந்தது. அதேபோல் ஈகை சுடர்களுக்கான கம்பிகளை முன்னாள் போராளிகள் வழங்கியிருந்தார்கள்.
அவ்வாறு பலர் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்த நிலையில் சகலருக்கும் மளிப்பளித்திருக்கவேண்டும். மேலும் நினைவேந்தல் ஒழுங்கமைப்பிலும் பெரும் தவறுகள் நடந்துள்ளன.

குறிப்பாக முதன்மைச் சுடர் ஏற்றப்படும்போது அங்கே முறையான அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை. உயிரிழந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்படவில்லை. ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை. இந்த பிழைகள் எல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டனவா? என நாங்கள் கேள்வி எழுப்ப விரும்புகிறோம்.

மேலும் முள்ளிவாய்க்காலில் முல்லைத்தீவு மக்கள் மட்டும் சாகவில்லை. வடகிழக்கு மற்றும் மலைகய மக்களும் கொல்லப்பட்டார்கள். ஆகவே வடகிழக்கு மற்றும் மலையகம் சார்ந்து 9 பேர் முதலமைச்சருடன் இணைந்து ஈகை சுடரை ஏற்றவேண்டும். என நாங்கள் கேட்டிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் சார்பில் யாருமே இல்லை. கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் எங்களை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பதில் நான் கிழக்கு மாகாண மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

எனவே கறுப்பு உடை அணிந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நின்றதே பல்கலைக்கழக மாணவர்கள் செய்த சாதனையாகும். பல்கலைக்கழக மாணவர்கள் கண்ணாடிக்கு முன்னால் நின்று தம்முடைய செயற்பாடுகளை ஒரு தடவை சீர்தூக்கி பார்க்கவேண்டும் – என்றார்.

Related Posts