Ad Widget

கறுப்புப்பட்டி போராட்டத்தில் துண்டுப்பிரசுரம் வீச்சு

ஆசிரியர் சங்கத்தினால் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நேற்றய தினம் மேற்கொள்ளப்பட்ட கறுப்புப்பட்டி போராட்டத்தில் ‘ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தற்கொலை செய்துகொண்டார்’ என தலையங்கம் இடப்பட்ட துண்டுப்பிரசுங்கள் வீசப்பட்டதாக சங்கத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

teachers-2

எனினும் அத்துண்டு பிரசுரங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலேயே தீ வைத்து எரித்துள்ளாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் கா.நிரூபன் வவுனியாவில் விஞ்ஞான பாட ஆசிரியராகக் கடமையாற்றி வந்த நிலையில் வடமாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 2013 செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்ற வேளை காணாமல் போனார்.

இவர் தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் முறைப்பாடு செய்திருந்தபோதிலும் அவர் பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையே காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி மாங்குளம் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் எலும்புக் கூடு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டன.

மறுநாள் நிரூபனின் சகோதரி இந்த எச்சம் தனது சகோதரனுடையது என்பதை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் நிரூபனின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் எனக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் வெள்ளிக்கிழமை (நேற்று) கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனடிப்படையில், பிற்பகல் 2.30மணியளவில் கறுப்புப்பட்டி அணிந்து திரண்ட ஆசிரியர்கள், ‘ஆசிரியர் நிரூபனை ஏன் கொன்றாய்?’, ‘நிரூபனின் கொலைக்கு விசாரணை எங்கே?’, ‘நீதி கேட்பவர்களை கைதுசெய்து பழிவாங்காதே’, ‘அரசே! ஆசிரியர் நிரூபனின் எலும்புக்கூட்டுக்கு பதில் கூறு’ போன்ற கோசங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன் மற்றும் சுகிர்தன், இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் புதிய ஜனநாயக மாக்சிய லெனினிச கட்சி என்பனவற்றின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுகொண்டிருந்தபோதே யாழ்.பேரூந்து நிலையப்பகுதியில் வைத்து மேற்படி துண்டு பிரசுரங்கள்; வீசப்பட்டுள்ளன.

துண்டுப்பிரசுரங்களை வீசியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts