பத்திரிகையாளர்களின் எழுத்துக்களில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும். அதனை விடுத்து கோழைத்தனமாக தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கதென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது இதற்கு முன்னரும் இவ்வாறான தாக்குதல்கள் பல இடம்பெற்ற போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையானது, தாக்குதல்களை அரசாங்கம் அனுமதிக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றதென சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலுக்கு பொலிஸார் இலக்கான போது பொலிஸார் எவ்வாறு நடந்துகொண்டனர் என்பதை அவர்களது நடவடிக்கைகள் காட்டின. அப்போது துரிதமாக செயற்பட்டதில் ஒரு 5 வீதம் கூட இப்போது இவ்விடயத்தில் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளதென தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம், இச்செயற்பாடு தொடருமாயின் ஜனநாயகம் இல்லாமல் போகும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.