கராச்சி நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கராச்சி நகரின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படை வீரர்கள் சிலருக்கும் விமான நிலைய ஊழியர்கள் சிலருக்கும் மரணத்தை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குற்றவியல் பயஙகரவாத நடவடிக்கையாகுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அவர்கள், இச்செய்தியை கேட்டு தாம் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சுமார் மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்திற்கு பலியாகியிருந்த இலங்கைக்கு பாக்கிஸ்தான் முகம் கொடுத்துள்ள பயங்கரமான அனுபவத்தை புரிந்துகொள்ள முடியுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் இலங்கை அரசாங்கத்தினதும் இலங்கைவாழ் மக்களினதும் ஆழ்ந்த அனுதாபத்தையும் பாக்கிஸ்தான அரசுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பிரதமர் முஹமத் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியின் தமிழாக்கம் வருமாறு:

பிரதமர் அவர்களே,

பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் சிலரை மரணத்திற்குட்படுத்தி
ஞாயிற்றுக்கிழமை இரவு கராச்சி நகர ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் மீது
மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் பயங்கரவாத தாக்குதலைப்பற்றி அறிந்து நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன் சர்வதேச பயணங்களுக்கும் வாணிபத்திற்கும் சேவை வழங்குகின்ற முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகளை அழித்து பாதிப்பை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலை வண்மையாகக் கண்டிப்பதற்கு இலங்கை அரசும் மக்களும் என்னுடன் இணைந்திருக்கின்றனர். சுமார் மூன்று தசாப்தங்கள் பயங்கரவாதத்திற்கு பலியாகியிருந்த இலங்கைக்கு பாக்கிஸ்தான் முகம் கொடுத்துள்ள இந்த பயங்கரமான அனுபவத்தை புரிந்துகொள்ள முடியும்.

பெரும் சேதம் ஏற்பட இருந்ததை தடுத்த பாக்கிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்களின் தொழில்திறன் மிக்க நடவடிக்கை பாராட்டத்தக்கது. இச் சம்பவம் உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொருட்டு அனைத்து விதத்திலும் பயங்கரவாதத்தையும் அதன் பல்வேறு தன்மைகளையும் ஒடுக்குவதற்காக தொடர்ந்தும் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுப்படுத்துதல் அத்தியாவசியமானதாகும். ஆகவே இலங்கையில் நாங்கள் எமது நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாக்கிஸ்தானிடமிருந்து கிடைத்த பெரும் ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். இலங்கை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் பாக்கிஸ்தானுடன் தொடர்ந்து இணைந்திருக்கும்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கைவாழ் மக்களின்சார்பிலும் நான் பாக்கிஸ்தான் அரசுக்கும் பாக்கிஸ்தான் மக்களுக்கும் எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரும் வேதனைக்குள்ளாகியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் குடும்பஅங்கத்தினர்களுடன் கவலையை பகிர்ந்துகொள்கிறேன். எமது சிந்தனைகளும் பிராத்தனைகளும் பாதிப்பில் இருந்து விடுபட்டு எழுச்சியடைவதற்கு முயற்சி செய்கின்ற அவர்களுடனும் காயமடைந்தவர்களுடனும் இருக்கும்.

பிரதமர் அவர்களே, எனது உயர்ந்த நேசத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Related Posts